நிறைநிலைப் பேராசிரியர் முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம் - ஆக்கம் முனைவர் செல்வஜோதி இராமலிங்கம்
- Tamil Malar (Reporter)
- 13 Dec, 2025
ஆக்கம்
முனைவர் செல்வஜோதி இராமலிங்கம்
முதுநிலை விரிவுரையாளர்
மொழியியல் புலம்
மலாயாப் பல்கலைக்கழகம்
நிறைநிலைப் பேராசிரியர் முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம் 1936-ஆம் ஆண்டு 22 டிசம்பர், தொப்புதுரை, சென்னையில் பிறந்தார். இவரது குடும்பப் பின்னணி, மழலை பருவம், பள்ளிப் படிப்பு போன்ற விவரங்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், 1957ஆம் ஆண்டில் தமது உயர்க்கல்வி பயணத்தை மதராஸ் பல்கலைகழகத்தில் தொடங்கியிருப்பது கண்டறிய முடிகிறது. தமது முதல் இளங்கலைப் பட்டத்தைப் கலைப்பிரிவில் (பொருளாதாரம், வரலாறு, தமிழ்) மதராஸ் பல்கலைகழத்தில் முடித்தார். அதனைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டில் அச்சமயம் சிங்கப்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைகழகத்தில் மீண்டும் கலைப்பிரிவில் (பொருளாதாரம், வரலாறு, இந்திய ஆய்வியல் துறை)யில் தமது அடுத்த இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். 1960ஆம் ஆண்டு அத்துறையில் சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, அவர் தனது முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை முறையே 1965; 1981ஆம் ஆண்டுகளில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பேராசிரியர் அவர்களின் முதுகலை ஆய்வானது “சங்க காலத்தில் தமிழர்களின் சமூக வாழ்க்கை” எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டது. முனைவர்பட்ட ஆய்வோ “இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இராமாயண மரபும் தாக்கமும்” எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டது. முனைவர் சிங்காரவேலு, தமது பணி ஓய்வுக்குப் பின் 1989ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைகழகத்தில் சட்டப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றதோடு, 1991ஆம் ஆண்டில் மலேசியச் சட்டநிபுணர் தகுதி வாரியத்தின் (Malaysian Legal Profession Qualifying Board), சட்டத்துறையில் பயிற்சி சான்றிதழும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, மலேசிய உயர்நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகவும் வழக்கறிஞராகவும் சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பேராசிரியர் அவர்கள் தமது பணி ஓய்வுக்குப் பின்னும் கல்வி கற்பதிலிருந்து நின்றுவிடாமல் இருந்தது நம் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
பேராசிரியர் அவர்களின் பின்னணியை உற்று நோக்கும்போது, 1960-இல் முதுகலை ஆய்வு உதவியாளராக (Graduate Research Assistant), மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் தமது பணியைத் தொடங்கியிருக்கின்றார். பின் 1963-1966 வரை உதவி விரிவுரையாளராகவும், 1966-1975 வரை விரிவுரையாளராகவும், 1975-1980 வரை உதவி பேராசிரியராகவும், 1980-1994 வரை பேராசிரியராகவும் பணிபுரிந்து பின் ஓய்வுப்பெற்றார். 2004ஆம் ஆண்டில் மலாயாப் பல்கலைக்கழகம் பேராசிரியரின் சேவையைப் பாராட்டி நிறைநிலைப் பேராசிரியர் (Emeritus Prof) பட்டத்தை வழங்கியது.
பல்கலைக்கழகத்தின் முழுநேரக் கல்விப் பணியாளராக முப்பத்தொன்று ஆண்டுகள் (1963-1994) பணியாற்றிய காலத்தில், பேராசிரியர் சிங்காரவேலு இருப்பத்தைந்து ஆண்டுகள் (1969-1994) பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகப் பணியாற்றினார். அவர் 1969 முதல் 1984 வரை பதினைந்து ஆண்டுகள் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராக நிருவாகப் பொறுப்புகளையும் மேற்கொண்டார். மேலும் கலைப்புலத்தின் இளங்கலை ஆய்வு மற்றும் முதுகலை ஆய்வு போன்ற பல்வேறு பிரிவு துணைக் குழுக்களில் இந்திய ஆய்வியல் துறையின் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார். பல்கலைக்கழகப் பாடத்திட்ட மறுசீரமைக்கும் வாரியத்தின் உறுப்பினராகவும் செனட்டால் நியமிக்கப்பட்டார்.
மேலும், பேராசிரியர் அவர்களின் பணிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகக் கருதப்படுவது யாதெனில் இந்திய ஆய்வியல் துறையில் பாடங்களைத் தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி மலாய் மொழியிலும் கற்பித்த விரிவுரையாளர்களில் இவரும் ஒருவராகத் திகழ்கிறார். இதன்வழி பல மாணவர்கள் தேசிய மொழியில் இந்தியர்களின் பண்பாடு மற்றும் நாகரிகங்களைக் கற்றறியும் வாய்ப்பு அமைந்தது. மேலும், பேராசிரியரின் இந்த முயற்சியானது இந்திய ஆய்வியல் துறையில் அதிக மாணவர்கள் பயிலும் சூழலை ஏற்படுத்தியது எனலாம். அதுமட்டுமின்றி, புலத்தில் பயிலும் மற்ற மாணவர்களும் இந்திய ஆய்வியல் துறையின் பாடங்களைத் தேர்வுப் பாடங்களாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தியப் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் பல்வேறு அம்சங்களில் பாடங்களை வழங்குவதோடு கூடுதலாக, பேராசிரியர் சிங்காரவேலு இந்தியா மற்றும் தென்கிழக்காசியாவில் கோவில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை போன்ற சிறப்புத் துறைகளிலும் பாடங்களை வழங்கினார். இந்தப் பாடங்கள் இந்தியப் பண்பாடு மற்றும் பாரம்பரியங்களுடன் தொடர்புடையவை என்றாலும், பொதுவாக மலேசிய மற்றும் தென்கிழக்காசிய சூழலை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டவை.
இவ்வாறாகத் தம் பணிகளில் என்றும் சிறந்து விளங்கிய பேராசிரியர் சிங்காரவேலு அவர்களின் ஆய்வுப் பங்களிப்புகளானவை மேலும் அவருக்குச் சிறப்புச் சேர்த்தன என்றுதான் சொல்ல வேண்டும். அவரது ஆய்வு இந்தியப் பண்பாடும் நாகரிகமும் மட்டுமின்றி, இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையே நூற்றாண்டுகள் நீடித்த கலாசார உறவுகளின் போது, தென்கிழக்காசிய மக்களிடையே அவற்றின் தாக்கம், தழுவல் மற்றும் கலாசார ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீதும் கவனம் செலுத்தியது. அவர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முதல் பேராசிரியரும் அவரது வழிகாட்டியுமான பேராசிரியர் சேவியர் எஸ். தணி நாயகத்தின் மேற்பார்வையில் தமிழ்ப் பண்பாடு மற்றும் நாகரிகம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழர்களின் சமூக வாழ்க்கை பற்றிய செய்திகளை ஆராய்வதற்காக 1966இல் “சங்க காலத்தில் தமிழர்களின் சமூக வாழ்க்கை” எனும் தலைப்பில் ஆய்வை மேற்கொண்டார். இது மலாயாப் பல்கலைக்கழகத்தின் மோனோகிராஃபாக (monograph) வெளியிடப்பட்டது. அவர் இதைச் சங்கத் தமிழ் இலக்கியங்களை நவீன மானுடவியல் கோட்பாடுகளின் உதவியுடன் ஆய்வு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆய்வு தமிழ் சமூக வரலாற்று ஆய்வுகளுக்கு மிக முக்கியமான அடித்தளங்களை உருவாக்கிக் கொடுத்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது.
தொடர்ந்து, பேராசிரியர் சிங்காரவேலு இந்தியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான கலாசார உறவுகளை ஆராய்வதிலும் ஈடுபட்டார். பேராசிரியர், கலாசாரங்கள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் கவனமாக ஆய்வு செய்திருக்கின்றார். இதன் மூலம் பழங்கால ஆசியாவில் கலாசாரங்கள் மிகவும் நவீன முறையில் ஒன்றோடொன்று தொடர்பில் இருந்தன என்பதை நிரூபித்தார். இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளைக் கடல் வழியாக இணைத்த வர்த்தக வளையங்கள் இருந்தன என்பதற்குத் தெளிவான சான்றுகளையும் வழங்கினார்.பேராசிரியர் சிங்காரவேலு அவர்களின் மிக முக்கியமான ஆய்வு பங்களிப்புகளில் ஒன்று அவரது ஒப்பீட்டு இலக்கிய ஆய்வுகள் எனக் கூறலாம். அதில் ஒன்றுதான் சமஸ்கிருதம், தமிழ், தாய்லாந்து மற்றும் மலாய் மொழிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீட்டு ஆய்வாகும். இவை வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்டிருந்ததால் நான்கு வேறுபட்ட பதிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த விரிவான பகுப்பாய்வு புராணக் கதைகள் இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியாவிற்குப் பரவும்போது எவ்வாறு தகவமைத்துக்கொண்டன என்பதை வெளிப்படுத்தியது. இதன் மூலம் மொழியியல், கட்டடக்கலை மற்றும் கலாசார ஒருங்கிணைப்பு செயல்முறைகளை இவரது ஆய்வுகள் எடுத்துக்காட்டின.இந்த அடித்தளத்தைக் கொண்டு 1982 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுதான் “இராமாயணத்தில் சீதையின் பிறப்பும் பெற்றோர்களும்” ஆகும். சமஸ்கிருதம், தமிழ், தாய்லாந்து, மலாய், ஜாவானிய மற்றும் பர்மிய மூலங்கள் உள்ளிட்ட பல மொழிகள் மற்றும் மரபுகள் முழுவதும் சீதையின் கதாபாத்திர அமைப்பின் பதினேழு வெவ்வேறு பதிப்புகளை இவரது ஆய்வில் பகுப்பாய்வு செய்தார். இந்த ஆய்வு இந்தியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையேயான கலாசார தாக்கம் இருதரப்பிலானது என்பதை வெளிப்படுத்தியது.எழுத்துவடிவ ஆய்வுகள் தொடர்பாக, பேராசிரியர் சிங்காரவேலு அவர்களால் 1968இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு “தாய்லாந்தின் மன்னர் இராமா கம்ஹேங்கின் சுகோதய எழுத்துக்கும் தென் இந்தியாவின் கிரந்த எழுத்துக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்பு பற்றிய குறிப்பு”. ஏழாவது முதல் 20வது நூற்றாண்டுகள் வரை எழுத்துப் பரிணாமத்தின் விரிவான ஒப்பீட்டுப் பகுப்பாய்வை இவருடைய ஆய்வு வழங்கியது. தென் இந்திய கிரந்தம், மலையாளம், தாய்லாந்து மற்றும் தமிழ் எழுத்துக்கள் முழுவதும் உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களின் திட்டமிட்ட ஆய்வின் மூலம் வரலாற்று இணைப்புகளை வெளிகொணர்ந்தார்.
தொடர்ந்து, அவர் எத்னோகிராஃபிக் ஆய்வான “தென்கிழக்காசிய தோல்பாவை கூத்துகளில் நடராஜர் வடிவம்; கிளந்தான் தோல்பாவை கூத்துகளின் சிறப்புக் குறிப்பு” வழி மலேசிய வாயாங் கூலிட் படைப்புகளில் மத ஒருங்கிணைப்பை ஆய்வு செய்தார். பாரம்பரிய தோல்பாவை கூத்தில் இந்து, பௌத்த, இஸ்லாமிய மற்றும் இயற்கை வழிபாட்டுக் கூறுகள் ஒன்றாக இணைந்திருந்த முறையை இது ஆவணப்படுத்தியது. தென்னிந்திய கோயில் வழிபாட்டு முறைகள் தென்கிழக்காசிய கலை நிகழ்ச்சிகளில் பிரதிபலிக்கின்ற முறையையும் இது வெளிப்படுத்துகிறது.
பேராசிரியர் சிங்காரவேலு தமது ஆய்வுகளின்
மூலம் பல்வேறு மொழிகள், மரபுகள் மற்றும் புவியியல் பகுதிகள் முழுவதும்
கதை வடிவமாற்றம், கலாசாரத் தழுவல் மற்றும் மத ஒருங்கிணைப்பு ஆகியவற்றை
ஆய்வு செய்வதற்கான சிறந்த ஒப்பீட்டு முறைகளை உருவாக்கினார். பேராசிரியர்
சிங்காரவேலு அவர்களின் ஆய்வுப் பங்களிப்புகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில்,
உலகில் கலாசாரப் பரிமாற்றம் குறித்த நமது புரிதலை மாற்றி அமைத்துள்ளன
என்றால் அது மிகையாகாது. அவரின் ஒப்பீட்டு இலக்கிய ஆய்வுகள் தொடர்பான
அவரது முன்னோடிப் பணி தொடர்ந்து இன்றும் கல்வி உலகில் பின்பற்றப்பட்டு வருகின்றன.
அவர் ஆய்வு செய்யும் முறை மிகச் சிறப்பானதாகவும் நுண்மையானதாகவும் அமையப்பெற்றிருப்பதோடு,
வெவ்வேறு விடயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கலாசாரத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும்
திறத்தை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் வெவ்வேறு நாடுகளின் கலாசாரங்கள்
ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் முறையை ஆய்வு செய்வதற்கான வழியினை இன்றைய ஆய்வாளர்களுக்கு
வகுத்துக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து, இவரது ஆய்வு பணிகளைத் தமது ஓய்வு காலங்களிலும் மிக வீரியமாகச் செயல்படுத்தினார். இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியில் (SOAS) 1967-1968 ஆம் ஆண்டுகளில் அவரது ஆய்வு விடுப்பின்போது (sabbatical leave), பண்டைய கால இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான கலாசார தொடர்புகள் துறையில் கூடுதல் ஆராய்ச்சி மேற்கொள்ள அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. கனடாவின் ஒன்ராய்டோவிலுள்ள வின்சர் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுகள் துறையில் ஒன்பது மாதங்கள் (மார்ச்-நவம்பர் 1974) ஆய்வினை மேற்கொண்டார். இந்திய ஆய்வாளர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாறு மற்றும் கலாசாரங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிஞர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தவும், கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள விரிவான நூலக வசதிகளைப் பயன்படுத்தவும் அவரது இரண்டாவது ஆய்வு விடுப்பு பெரும் வாய்ப்பாக அமைந்தது.
அனைத்துலக நிலையில் இவர் பல மாநாடுகளில் பங்கேற்று இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான கலாசார உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார். மாநாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆய்விதழ்களில் இந்தக் கட்டுரைகளின் அடுத்தடுத்த வெளியீடு, அவரது ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பரந்த அறிவை உலகில் உள்ள ஆர்வமுள்ள அறிஞர்களுக்குப் பகிர்வதற்கு உதவியது. 1966 முதல் 1992 வரை, பேராசிரியர் சிங்காரவேலு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற குறைந்தது 25 சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தார்.
அவரது பெரும்பாலான கட்டுரைகள் ஆசிய நாட்டுப்புற ஆய்வுகள்; ராயல் ஆசியாட்டிக் சொசைட்டியின் மலேசிய கிளையின் ஆய்விதழ் (JMBRAS), சயாம் சொசைட்டியின் ஆய்விதழ், தமிழ் ஆய்வுகள் சார்ந்த ஆய்விதழ் (மதுரை, இந்தியா) மற்றும் தமிழ் நாகரிகம் போன்ற ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பேராசிரியரின் ஆய்வுகள் மட்டுமின்றி புத்தக வெளியீடுகளும் சமூகத்திற்கும் கல்வி உலகிற்கும் பெரும்பங்காய் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. பேராசிரியர் சிங்காரவேலுவின் எழுத்துப் பணிகள் பல நூல்களையும் உள்ளடக்கியவை, அவை இன்றைய மலேசிய சமுதாயத்திற்குத் தொடர்ந்து பொருத்தமானவையாகவும் உள்ளன. அவை கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முரண்பாடுமின்றி எவ்வாறு தொடர்புகொண்டன என்பதைப் புரிந்துகொள்ள துணைப்புரிகின்றன. அவரது குறிப்பிடத்தக்க வெளியீடுகளானவை மலாய் பாரம்பரியத்தில் இராமாயணம், மலாக்கா இராச்சியத்திலிருந்து தென் இந்தியாவில் விஜயநகர இராச்சியத்திற்கு லக்சமணா ஹாங் துவாவின் தூதுப் பணி, “மாண்டி சஃபார் திருவிழாவைச் சிறப்பு குறிப்பாகக் கொண்ட மலாய்-தமிழ் கலாசார தொடர்புகள்”, தமிழ் நாகரிகம், “மலாய்-தமிழ் கலாசார தொடர்புகள்”, ஆசிய நாட்டுப்புற ஆய்வுகள், “தீபகற்ப மலேசியாவில் இந்து மத நம்பிக்கைகளுக்கும் உள்நாட்டு மலாய் நாட்டுப்புற நம்பிக்கைகளுக்கும் இடையிலான ஒப்பீடு” போன்றவையாகும்.
இந்த அனைத்து வெளியீடுகளிலும், பேராசிரியர் சிங்காரவேலு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் அதன் மக்களும் இந்திய கலாசார பாரம்பரியங்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்டு அவற்றைத் தங்கள் சொந்த கலாசார மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக்கொள்வதன் மூலம், தங்கள் சொந்த அடையாளத்தை இழக்கவில்லை என்பதை நம்பத்தக்க வகையில் நிரூபித்துள்ளார். பேராசிரியர், ஆய்வுகள் மட்டுமின்றி தமிழ் இலக்கிய மரபுகளுக்கும் மொழிப்பெயர்ப்புக்குமே தமது பங்கை செவ்வனே செய்து வந்துள்ளார். அவரது கலாசாரப் பாதுகாப்பு மற்றும் கலாசாரங்களுக்கிடையான அர்ப்பணிப்பு அவரது மொழிபெயர்ப்புப் பணி வாயிலாகத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக “திருக்குறள் மும்மொழி” (2013) அதாவது, ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளில் அணுகக்கூடியதாக மாற்றினார். இந்த மொழிபெயர்ப்புக் கலாசாரங்களுக்கிடையான ஒரு முக்கியமான பங்களிப்பாக விளங்கியது. அதுமட்டுமின்றி, இவர் ஆன்மீகக் கட்டுரைகள், திருக்குறள் உரை மொழிப்பெயர்ப்பு (ஆங்கிலம் & மலாய்மொழி), ஆன்மீக செய்யுள் மொழிப்பெயர்ப்பு (கந்தர் அனுபூதி) போன்ற மொழிபெயர்ப்புப் பணிகளையும் செய்துள்ளார்.
பேராசிரியர் முனைவர் சிங்காரவேலு அவர்கள், தனது பணியிடையே சமூகப் பங்களிப்பிலும்
மிகச் சிறந்து விளங்கியிருப்பது அவரது வாழ்க்கை வரலாற்றை உற்று நோக்கும் போது அறிய
முடிகிறது. பேராசிரியர் சிங்காரவேலு அவர்களின் பணி இன்றும் பல
ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது. தென் ஆசியா மற்றும் தென்கிழக்காசியக்
கலாசார ஆய்வுகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் அவரது ஆய்வு முறைகளை இன்றும்
பின்பற்றுகிறார்கள். கலாசாரங்களுக்கிடையேயான உறவுகளை ஆய்வு செய்பவர்களுக்கு
அவர் ஒரு சிறந்த முன்னுதாரணம். அவரது மரபு தொடர்ந்து எதிர்கால
ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் விளங்குகிறது. இத்தகைய
மாமனிதர் நம் சமூகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர் 13 சனவரி 2020 இல் காலமானார்.
இவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு பெரும் இழப்பாக அமைகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



