16-ஆவது பொதுத் தேர்தல் இன்னும் 4 முதல் 5 மாதங்களில் நடைபெறலாம் – எம்சிஏ கணிப்பு
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
பத்து பஹாட், செப். 17-
மலேசியாவின் 16-ஆவது பொதுத் தேர்தல் (PRU16) இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் நடத்தப்படக்கூடும் என எம்சிஏ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் கருத்துத் தெரிவித்துள்ளார். இது அவரது கணிப்பாகும்; தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
முந்தைய பொதுத் தேர்தல்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கணிப்பு முன்வைக்கப்படுவதாக அவர் கூறினார். இதுவரை நடைபெற்ற 15 பொதுத் தேர்தல்களைப் பார்க்கும்போது, பெரும்பாலான அரசாங்கங்கள் முழுமையான ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“முந்தைய தேர்தல்களின் காலக்கட்டங்களைப் பார்த்தால், ஒரு நிர்வாகம் சுமார் மூன்று ஆண்டுகள் எட்டு மாதங்கள் முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த பின்னர் தேர்தல் நடைபெற்றுள்ளது. எனவே இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் இருக்கலாம்,” என வீ கா சியோங் தெரிவித்தார்.
யோங் பெங்கில் நடைபெற்ற ஜொகூர் மாநில எம்சிஏ ஆண்டு மாநாட்டை தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



