அம்னோ DAP உடன் இருக்கும் வரை ‘மகா கூட்டணி’ சாத்தியமில்லை! – முகைதீன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 22: அம்னோ, டிஏபி  உடனான அரசியல் கூட்டணியைத் தொடரும் வரையில், மலாய் கட்சிகளை ஒன்றிணைக்கும் ‘மகா கூட்டணி’ (Grand Coalition) உருவாகாது என்று பெர்சாத்துக் கட்சித் தலைவர் முகைதீன் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி முன்வைத்த யோசனை குறித்து கருத்துத் தெரிவித்த முகைதீன், அனைத்து மலாய் கட்சிகளையும் அம்னோ தலைமையின் கீழ் இணைப்பதே நோக்கமாக இருந்தால், தற்போதைய அரசியல் சூழலில் அது சாத்தியமில்லை என்றார்.

இதனை நாங்கள் ஏற்க முடியாது. அல்லது, அஹமட் ஜாஹிட் ஹமிடி இப்போது பக்காத்தான் ஹரப்பான் (PH) கூட்டணியிலிருந்து விலகத் தயாராக இருக்கிறாரா? என்று, நேற்று  ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கேள்வியெழுப்பினார்.

ஒருகாலத்தில் கடும் அரசியல் எதிரிகளாக இருந்த அம்னோவும் டிஏபியும், தற்போது பிரதமர் அன்வார் இப்ராஹீம் தலைமையிலான ஒற்றுமை அரசில் கூட்டாளிகளாக உள்ளன. பல மாநிலத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களிலும் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அம்னோ தங்களை ‘UmDAP’ என விமர்சிப்பதை மறுத்து வருகிறது. கட்சியின் துணைத் தலைவர் முகம்மட் ஹசான், டிஏபி உடனான உறவு வெறும் “ஆட்சி ஏற்பாட்டுக்கான கூட்டாண்மை” மட்டுமே என சமீபத்தில் விளக்கம் அளித்தார்.

இந்த மாத தொடக்கத்தில் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் பதவியில் இருந்து விலகிய முகைதீன் யாசின், புதிய கூட்டணியில் சேர்வது குறித்து பெரிகாத்தானுக்குள் இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

பெரிகாத்தானுக்குள், எந்தக் குழுவுடன் இணைவது என்ற விவகாரம் இன்னும் விவாதிக்கப்படவில்லை. கூட்டணிக்கு வெளியே உள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும், அனைவரும் சேர்ந்து விவாதித்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் இல்லை என்று கூறினார்.

அஹமட் ஜாஹிட் ஹமிடியைச் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, அவர் தனது நோக்கத்தைத் தெளிவுபடுத்தினால் சந்திப்பு சாத்தியமென்றார்.

சந்திப்புகள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் முதலில், அவர் கூறியதின் உண்மையான பொருள் என்ன என்பதை தாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முகைதீன் கூறினார்.

டிஏபி தொடர்புடைய எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தெளிவான விளக்கமும் நோக்கமும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின் நோக்கம் அரசியல் ஒத்துழைப்பு என்பதைக் குறித்து தெளிவாக விளக்கப்பட வேண்டும். டிஏபி போன்ற கட்சியுடன் உடன்பாடு செய்வதை தான் எளிதில் ஏற்க மாட்டேன் என்று முகைதீன் கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற அம்னோவின் 2025 பேராளர் மாநாட்டில், மலாய்–முஸ்லிம் கட்சிகளை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் ‘மகா கூட்டணி’ யோசனையை அஹமட் ஜாஹிட் ஹமிடி முன்வைத்தார். இந்த யோசனை ஒற்றுமை அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்றும், ஆரம்பத்தில் இது அதிகாரப்பூர்வமற்ற ஒத்துழைப்பாக இருக்கும்; கட்சிகள் கலைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், உத்துசான் மலேசியா செய்தித்தாளுக்கு பேட்டியளித்த பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அகமட், டிஏபி இடம்பெறாத பட்சத்தில் மட்டுமே ‘மகா கூட்டணி’ யோசனையில் பாஸ் இணையும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *