ஈரான் – அமெரிக்கா தற்காலிக போர் நிறுத்தம்! நிபந்தனைகளை முன்வைத்தது ஈரான்
- Shan Siva
- 08 Apr, 2026
வாஷிங்டன், ஏப் 8: ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு இனி தாக்குதல் இருக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து
தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு
நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது ஈரான். அதோடு ஹார்முஸ் ஜலசந்தியை
ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம்
பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே
மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் இந்த இடைக்கால போர் நிறுத்தம் ஏற்கப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீரின்
கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன். இரண்டு வார
காலத்துக்கு ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம். ஹார்முஸ் ஜலசந்தியை
முழுவதுமாக, உடனடியாக மற்றும் சரக்கு கப்பல்கள்
பாதுகாப்பாக கடக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு
கவுன்சில் இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே வேளை சில
நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
தங்களுக்கு எதிரான தாக்குதல்
நிறுத்தப்பட்டால் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல் நிறுத்தப்படும் என ஈரான்
வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படை உடன்
இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும்
என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே
ஏப்ரல் 10-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை
தொடங்கும் எனத் தெரிகிறது.
நிபந்தனைகளை ஈரான்
முன்மொழிந்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்
விவரம்:
* ஈராக், லெபனான், ஏமன் மீதான போரை முழுவதுமாக
நிறுத்த வேண்டும்.
* ஈரான் மீதான
போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
* பிராந்தியத்தில்
அனைத்து விதமான மோதல்களையும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
* ஹார்முஸ்
ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து
நெறிமுறைகளை நிறுவ வேண்டும்.
* ஈரானை மீண்டும்
கட்டமைப்பதற்கான செலவு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும்.
* ஈரான் மீது
விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
* அமெரிக்கா
முடக்கிய ஈரானின் சொத்துகள், நிதியை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு ஈரான் தங்களது கோரிக்கைகளை
முன்வைத்துள்ளது.
முன்னதாக, அணு ஆயுதம் தொடர்பாக 10 நாட்களுக்குள் அமெரிக்காவுடன்
ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்; ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என்று
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்காக
10 நாட்கள் காலக்கெடுவையும் அவர்
விதித்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் ராணுவம்
திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து ஈரானின் கார்க்
தீவு மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று
குண்டுமழை பொழிந்தன. ஈரானின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியில் 90% கார்க் தீவு வழியாக நடைபெறுகிறது. அந்த தீவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ராணுவ தளங்கள்
சக்திவாய்ந்த குண்டுகள் மூலம் நேற்று தரைமட்டமாக்கப்பட்டன.
மேலும், ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட
அந்த நாட்டின் ரயில் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள்
மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தின. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் அலி அல் சலேம் விமானப் படைத் தளத்தின் மீது
ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 15 அமெரிக்க வீரர்கள் படுகாயம்
அடைந்தனர்.
மேலும் சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள
அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தொடர்
தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் ஹைபா நகரில் உள்ள அடுக்குமாடி
குடியிருப்பில் நேற்று ஏவுகணை விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர்
படுகாயம் அடைந்தனர். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகள்
அலை, அலையாக தாக்குதல் நடத்தின.
ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படை
நேற்று வெளியிட்ட அறிக்கையில், எங்களது எரிசக்தி நிலையங்கள், பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஹார்முஸ்
ஜலசந்தி திறக்கப்படாது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மிரட்டலுக்கு அஞ்ச
மாட்டோம். சர்வதேச அளவில் பல ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு கிடைக்காத சூழலை
ஏற்படுத்துவோம்” என கூறப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



