கர்ப்பமான மாணவிகளும் கல்வியைத் தொடர வேண்டும்: எஸ்.பி.எம். எழுத அமைச்சு உதவும் – அமைச்சர்
- Surendran Sumdraraj
- 05 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 5 –
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம் மாணவிகளும் தங்களது கல்வியை இடைநிறுத்தாமல் தொடர்ந்து பயில வேண்டும் என்றும், அவர்கள் எஸ்.பி.எம். (SPM) தேர்வை எழுதுவதற்கு கல்வி அமைச்சு தேவையான உதவிகளை வழங்கும் என்றும் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் கருத்து வெளியிட்ட அவர், கல்வி என்பது வாழ்க்கையை மாற்றக்கூடிய மிக முக்கியமான கருவி என்பதால், எந்த மாணவரும் கல்வியிலிருந்து விலகக்கூடாது என்று வலியுறுத்தினார்.
“பிரசவத்திற்குப் பிறகு ஓய்வுக் காலம் முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பி கல்வியைத் தொடர வேண்டும். இந்த விவகாரத்தில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். வாழ்க்கையில் எளிதான வழியைத் தேர்வு செய்யக் கூடாது. வன்முறை மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சுழற்சியிலிருந்து வெளியேற கல்வியே முக்கிய திறவுகோலாகும்,” என்று அவர் கூறினார்.
மேலும், கர்ப்பம் காரணமாக மாணவிகள் கல்வியைப் பாதியிலேயே கைவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகக் கல்வி அமைச்சு தொடர்ந்து உதவி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடரவும், எஸ்.பி.எம். தேர்வில் பங்கேற்கவும் தேவையான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



