பத்திரிகை தகவல்கள் போதுமானதாக இல்லை: நேபாள் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை
- Shan Siva
- 12 Sep, 2026
கோலாலம்பூர், செப் 12: நேபாளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பத்தினர், அதிகாரிகளுடன் இருவழித் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வகையில், அங்குள்ள தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (MKN) செயல்பாட்டு மையத்திற்குத் தங்கள் பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 55 குடும்பங்களில் 49 குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'மலேசியா-நேபாள பேரிடர் குடும்ப ஆதரவுக் குழுவின்' செய்தித் தொடர்பாளரான மணிவண்ணன் ரெத்தினம், நேரடிப் பிரதிநிதித்துவம் இருந்தால் தேடுதல் நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய தகவல்களைத் தங்களால் வழங்க முடியும் என்று கூறினார்.
இது செயல்பாட்டுக்கட்டுப்பாட்டைக் கோரும் முயற்சியோ அல்லது அதிகாரிகளின் பணியில் தலையிடும் முயற்சியோ அல்ல. இது வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு மற்றும் இருவழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றிற்கான கோரிக்கையாகும் என்று மணிவண்ணன் கூறினார். காணாமல் போனவர்களில் இவருடைய சகோதரி கோமதியும் ஒருவர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் வெளியுறவு அமைச்சகம் தினசரி தொடர்பில் இருப்பதை ஒப்புக்கொண்ட அதே வேளையில், 17 நாட்களுக்குப் பிறகு, பொதுவான பத்திரிகை அறிக்கைகளில் வெளியாகும் தகவல்கள் மட்டும் போதுமானதாக இல்லை என்று மணிவண்ணன் குறிப்பிட்டார்.
எல்லையின் திபெத் பகுதியில் மூன்று பேர் குடிநுழைவு நடைமுறைகளை முடித்திருந்தனர் என்ற உறுதிப்படுத்தலைத் தவிர, பேரிடர் நிகழ்ந்த ஆறாவது நாளிலிருந்து காணாமல் போன 55 மலேசியர்களின் நிலை குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
மேலும், பேரிடர் நிகழ்ந்த ஒன்பதாவது நாளிலிருந்தே பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்து, தாங்கள் சேகரித்த தகவல்களை நேரடியாக விளக்கிக் கூறவும் வழிகாட்டுதலைப் பெறவும் குடும்பத்தினர் முயன்று வருவதாகவும், ஆனால் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது அறிக்கையைத் தொடர்ந்து, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜார்ஜ், வெளியுறவு அமைச்சர் முகமது ஹசானிடம், அந்த 55 குடும்பங்களுக்கும் தெளிவான மற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கு சார்ந்த தகவல்களையும் வழங்குமாறு வலியுறுத்தினார்.
உயர் மட்ட உத்தரவுகள் மற்றும் மலேசிய மீட்புக் குழுவினரின் வருகை ஆகியவை பாராட்டத்தக்கவை என்றாலும், அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரடியான மற்றும் செயல்முறைக்கு உதவக்கூடிய தகவல்களை வழங்க வேண்டும் என்று குணராஜ் கேட்டுக்கொண்டர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



