அரசியலுக்குத் தேவைப்படாததால் நன்கொடையைத் திருப்பி அனுப்பி விட்டேன்!
- Muthu Kumar
- 11 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 11-
அமெரிக்காவிலிருந்து கிடைக்கப் பெற்ற அறுபத்தெட்டுக் கோடியே பத்து லட்சம் டாலரில் அறுபத்திரண்டு கோடி டாலரை 2013ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னர் திருப்பி அனுப்பி விட்டேன். அரசியலுக்காகச் செலவிட வேண்டிய அவசியம் ஏற்படாததால் அப்பணம் திருப்பி அனுப்பப்பட்டது என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த நன்கொடை தானோரே ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் எனும் நிறுவனத்தின் வாயிலாக சவூதி அரேபியாவின் காலஞ்சென்ற மன்னர் அப்துல்லாவிடமிருந்து கிடைக்கப்பெற்றது என நம்பியதாக நஜிப் குறிப்பிட்டார்.தானோரே நிறுவனம் மன்னர் அப்துல்லாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த நன்கொடை தானோரே நிறுவனத்தின் வாயிலாக கிடைக்கும் என்று அறிவிக்கும் ஒரு கடிதமும் எனக்கு கிடைக்கப் பெற்றது. மன்னர் அப்துல்லா அளித்த அரசியல் நன்கொடையாகவே அதனை நான் கருதி வந்தேன். அதன் காரணமாகத்தான் அப்பணத்தை அரசியல் நோக்கங்களுக்காகவும் அறப்பணிகளுக்காகவும் பயன்படுத்தினேன் என்றார் நஜிப்.
அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஸ்பெயின் மன்னர் கார்லோஸும் மன்னர் அப்துல்லாவிடமிருந்து பத்து கோடி டாலரை நன்கொடையாகப் பெற்றிருந்தார் என்றும் நஜிப் கூறினார்.அந்த நன்கொடைக்கான பணப் பரிமாற்றம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்று அம்பேங்க் வங்கியோ பேங்க் நெகாராகவோ என்னிடம் தெரிவிக்கவில்லை. சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்கள் பற்றி எச்சரிக்க மத்திய வங்கியான பேங்க் நெகாராவில் ஒரு விஷேச முறையே அமலில் உள்ளது என்றார் அவர்.
பணப் பரிமாற்றம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நன்கொடையைப் பெறுவதற்காக உள்நாட்டிலேயே வங்கிக் கணக்குகளைத் திறந்தேன். 1எம்டிபி நிறுவனத்தின் பணத்தைக் கையாட நினைத்திருந்தால் ஜாஸ்மின் லூ அல்லது அம்ஹாரி எஃபெண்டி நஸாருடின் ஆகியோரைப் போன்று வெளிநாடுகளிலேயே வங்கிக் கணக்குகளைத் திறந்திருப்பேன் என்றார் நஜிப்.ஜாஸ்மின் லூ 1எம்டிபி நிறுவனத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஆவார். அதே வேளையில், அம்ஹாரி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியவராவார்.
கடந்த 2011ஆம் ஆண்டு பிப்ரவரிக்கும் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இடையில் நஜிப்பின் அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் 228 கோடி வெள்ளி வரவுவைக்கப்பட்டிருந்தது. அது 1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான பணம் என்று கூறப்படுகிறது. அதன் தொடர்பில் நஜிப் மீது நான்கு அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றங்களும் 21 கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றங்களும் சுமத்தப்பட்டுள்ளன. அவ்வழக்கில் நஜிப் தற்போது தற்காப்புவாதம் செய்து வருகிறார்.உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுய்ரா தலைமையில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



