உலகப் புகழ்பெற்ற சிப்பாங் சர்வதேச பந்தயச் சுற்றுப்பாதையைப் பார்வையிட்ட சிப்பாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
- Surendran Sumdraraj
- 02 Jul, 2026
தி.கிரிஷன்
சிப்பாங், ஜூலை 2-
சிப்பாங் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உலகப் புகழ்பெற்ற சிப்பாங் சர்வதேச பந்தயச் சுற்றுப்பாதை (Sepang International Circuit - SIC)-யைப் பார்வையிடும் அரிய வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. உலக சாதனை வீரர்கள் போட்டியிட்ட இப்புகழ்பெற்ற பந்தயத் தளத்தை நேரில் பார்வையிட்ட மாணவர்கள் அளவற்ற மகிழ்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பயனுள்ள அனுபவத்தைப் பெற்றனர்.
இப்பயணத்தின் போது மாணவர்கள் பந்தயப் பாதை, அதன் வரலாறு, உலகத் தரத்திலான வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் மோட்டார் விளையாட்டுகள் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்துகொண்டனர். இவ்வனுபவம் அவர்களின் அறிவை விரிவுபடுத்தியதோடு, பெரிய கனவுகளைக் காணும் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் வழங்கியது.
இந்த அரிய கல்விசார் பயணத்தை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து, அன்புடன் வரவேற்று சிறப்பாக வழிநடத்திய சிப்பாங் சர்வதேச பந்தயச் சுற்றுப்பாதையின் பொறுப்பாளர் திரு. அருள் நடேசன் அவர்களுக்கு சிப்பாங் தமிழ்ப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
மேலும், இந்நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, மாணவர்களின் நலனிலும் கல்வி முன்னேற்றத்திலும் தொடர்ந்து அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் சிப்பாங் தமிழ்ப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்க (PIBG) தலைவர் திரு. பூபாலன் அவர்களுக்கும் பள்ளியின் சார்பில் உளப்பூர்வமான நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.
இத்தகைய அனுபவக் கல்விப் பயணங்கள் மாணவர்களின் பார்வையை விரிவுபடுத்தி, அவர்களின் எதிர்காலக் கனவுகளுக்கு புதிய சிறகுகளை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற அரிய வாய்ப்புகள் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என பள்ளி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



