தென் ஆப்பிரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
- Surendran Sumdraraj
- 11 Jun, 2026
ஜோகன்னஸ்பர்க், ஜூன் 11 –
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள கிளீவ்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 10-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் வாகனம் ஒன்றில் சம்பவ இடத்திற்கு வந்து, குடியிருப்புப் பகுதியின் பல்வேறு இடங்களில் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரும் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், அப்பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கும்பல் மோதல்களுடன் இந்த சம்பவத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை கைது செய்வதற்காக தென் ஆப்பிரிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



