தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை சரிவு! காணாமல் போன 9,506 இந்திய மாணவர்கள்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 12,

மலேசியத் இந்தியர்களின் கல்வி அடையாளமாக இருக்கும் தமிழ்ப்பள்ளியில் நம் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இன்று ஜனவரி 12, பள்ளிக் காலாண்டு தொடங்கிய நிலையில் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடவும் குறைவாக இருப்பதாக மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பான LPS தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 11,021 ஆக இருந்தது. ஆனால் இந்த 2026 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டில் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 10,330 மட்டுமே. கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 691 மாணவர்கள் குறைந்துள்ளன

மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பான LPS வெளியிட்டிருக்கும் அறிக்கையின் வாயிலாகத் தமிழ்ப்பள்ளிகள் அமைந்துள்ள 11 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 30 முதல் 200 க்கும் குறைவாக மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், ஜொகூர், கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டிருக்கும் நிலையில் நெகிரி செம்பிலான், பகாங், மலாக்கா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் பதிவு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
 

நெகிரி செம்பிலானில் கடந்த ஆண்டு 1038 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 1070 மாணவர்கள் என கூடுதலாக 32 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

பகாங்கில் கடந்த ஆண்டு 285 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 296 மாணவர்கள் என கூடுதலாக 11 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

 மலாக்காவில் கடந்த ஆண்டு 217 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 323 மாணவர்கள் என கூடுதலாக 106 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

 கெடாவில் கடந்த ஆண்டு 923 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 880 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 பினாங்கில் கடந்த ஆண்டு 824 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 743 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 பேராக்கில் கடந்த ஆண்டு 1,615 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 1497 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 சிலாங்கூரில் கடந்த ஆண்டு 3574 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 3211 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 ஜொகூரில் கடந்த ஆண்டு 2013 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 1840 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 கோலாலம்பூரில் கடந்த ஆண்டு 523 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 460 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 பெர்லிஸில் கடந்த ஆண்டு 8 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 7 மாணவர்கள் மட்டுமே முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 கிளாந்தானில் கடந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர் மட்டுமே பதிவு செய்திருந்த நிலையில் இவ்வாண்டு 3 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர்.

 புள்ளிவிவரங்களில் ஆய்வின்படி கடந்த 2023 ஆம் ஆண்டு 11,712 மாணவர்களும் 2024 ஆம் ஆண்டு 11,568 மாணவர்களும். 2025 ஆம் ஆண்டு 11,021 மாணவர்களும் என தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை நோக்கியே செல்கிறது. இவ்வாண்டு மொத்தம் 10,330 மாணவர்கள் மட்டுமே தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு பதிவு செய்துள்ளனர்.

 கடந்த 2019 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள் தற்போது 7 வயதை அடைந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு மலேசியாவில் மொத்தம் 487,957 குழந்தைகள் பிறந்திருப்பதாக மலேசியப் புள்ளியியல் துறையான Department of Statistics Malaysia (DOSM)  தெரிவித்துள்ளது. அதில் இந்தியக் குழந்தைகள் 4.1%. அதாவது மொத்தம்  19,836 இந்தியக் குழந்தைகள். தற்போது முதலாம் ஆண்டில் நம் இந்திய சமூகத்தின் 19,836 குழைந்தை பதிவு செய்திருந்தாலும் தமிழ்ப்பள்ளியில் 10,330 குழந்தைகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். 9,506 குழந்தைகள் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கப்படாமல் மாற்றான் பள்ளியில் பதிவு செய்துள்ளனர்!

 விரைவில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் கணக்கெடுக்கப்பட்டு வெளியிடப்படும் என மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பான LPS தெரிவித்துள்ளது.

செய்தி - தினகரன் சங்கரன் 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *