எரிபொருள் மற்றும் மின்சார கட்டண உயர்வு குறித்த தவறான தகவல் – 17 பேரை விசாரிக்கும் எஸ்கேஎம்எம்
- Surendran Sumdraraj
- 03 Apr, 2026
கோலாலம்பூர், ஏப். 3-
எரிபொருள் விலை உயர்வு மற்றும் புதிய மின்சார கட்டண மாற்றங்கள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் 17 பேரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எஸ்கேஎம்எம்) விசாரணை செய்து வருகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இதுவரை எட்டு பேரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், எரிபொருள் விலை உயர்வு குறித்த தவறான தகவல்களுக்கு தொடர்பான ஐந்து வழக்குகளும், புதிய மின்சார கட்டணங்கள் குறித்து பரப்பப்பட்ட மூன்று வழக்குகளும் அடங்குகின்றன.
மேலும், மற்ற ஒன்பது பேர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்கள் விரைவில் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வது பொதுமக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எஸ்கேஎம்எம் எச்சரித்துள்ளது.
அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



