ஹுலு லங்காட்டில் வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறப்படும் 4 மாடி கட்டிடம்: SPRM தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 11 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 8 –
ஹுலு லங்காட், சுங்கை தெக்காலி பகுதியில் வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கூறப்படும் நான்கு மாடிக் கட்டிடம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பு (MCW) வலியுறுத்தியுள்ளது.
MCW தலைவர் ஜெய்ஸ் அப்துல் கரீம் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக SPRM மட்டுமின்றி மாவட்ட அலுவலகம், குடிநுழைவுத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, மலேசிய அரச காவல் படை (PDRM) உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒருங்கிணைந்த அதிரடி சோதனையின்போது இந்த வளாகத்தில் குடிநுழைவுத் துறையினர் சோதனை நடத்தி, ஏராளமான வெளிநாட்டினரைக் கைது செய்திருந்ததாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
எனினும், அந்த நடவடிக்கைக்குப் பிறகும் இந்த விவகாரம் ஏன் இதுவரை முழுமையாக தீர்க்கப்படவில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் எவ்வாறு நடைபெற்றன, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் ஏதேனும் அலட்சியம் அல்லது முறைகேடு இடம்பெற்றதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என MCW வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



