தமிழன் என்ற கர்வம் எங்கு சென்றாலும் நமக்கு இருக்க வேண்டும்

top-news
FREE WEBSITE AD

ஆங்கில பத்திரிகையில் நான்கு வருடமாக பணியாற்றி, 11 வருடமாக விழுதுகள் நிகழ்ச்சியில் பணியாற்றி, தற்பொழுது 15 வருடமாக ஹரேனா அகாடமியில்  புகழ் நாட்டி வருபவர்தான் சுஷ்மிதா முருகன். 

என்எஸ்டி செய்தி பிரிவில் இந்தியர்கள் குறைவு. மலாய்க்காரர்களும், சீனர்களுமே அதிகம். அவ்வேளையில் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும்பொழுது என்னைத்தான் என்னுடைய பதிப்பாசிரியர் அனுப்பி வைப்பார். அவ்வாறு பல வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதுதான் ஆஸ்ட்ரோவில் நடக்கக்கூடிய பல நிகழ்ச்சிகளுக்கு நேர்காணல் நடத்தும் வாய்ப்பு கிட்டியது. நடிகர்கள் பாடகர்கள் வெளியூர் கலைஞர்கள் யாரேனும் மலேசியாவிற்கு வருகை புரிந்தால் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் எப்பொழுதும் ஆங்கிலப் பிரிவு செய்தியாளர் என்பதை தாண்டியும் தமிழில்தான் கேள்விகளைக் கேட்பேன். அதுவே என்னுடைய அடுத்தகட்ட வெற்றிக்கு இட்டுச் சென்றது என்று சுஷ்மிதா கூறினார்.



நான் உச்சரிக்கும் தமிழ் தெளிவாக உள்ளதால் ஆஸ்ட்ரோவில் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று டாக்டர் ராஜேந்திரன் செல்லமுத்து கூறினார். அவ்வாறே நான்கு ஆண்டுகள் நான் என்எஸ்டியில் பணிபுரிந்த பிறகு, எனக்கு ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளராக வழிநடத்த அழைப்பு கிடைத்தது. நேர்முகத் தேர்வுக்கு சென்ற பொழுதுதான் என்னைவிட திறமையான தமிழ் புலமை வாய்ந்த பலர் அங்கு வந்திருந்தது தெரிந்தது. அதில் சோதிநாதன் பரஞ்சோதி, கண்ணா சிம்மாதிரி, டாக்டர். சிவனேசன், விரிவுரையாளர் மட்யா, டாக்டர் மணிபாரதி போன்ற மலேசியாவில் புகழ்பெற்ற தமிழ் பேச்சாளர்களும் ஆய்வாளர்களும் இருந்தனர்.

எனக்குத் தெரிந்த பேச்சு தமிழில் அந்த நேர்முகத் தேர்வை முடித்தேன். ஒரு வாரம் கழித்து, நான் தேர்வாகியுள்ளதாக அழைப்பு வந்தது .ஓர் ஆங்கில பத்திரிகையில் எழுத்தாளராக இருந்து தமிழ் ஊடகத்தில் தொகுப்பாளராக மாறுவது மிகப்பெரிய சவால். ஆனால், தாய் மொழியாக்கிய தமிழ் மொழிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை ஏற்றுக் கொண்டேன்.



பேராக், தாப்பாவில் சிறிய நகரத்தில் பிறந்த எனக்கு, செய்தித்தாள் ஊடகவியலாளராகப் பணியாற்றுவதே மிகப்பெரிய லட்சியம். சிறுவயதில் படிப்பை விட்ட என் பெற்றோர்களுக்குப் பெருமை. அவ்வகையில் விழுதுகள் வழி தொலைக்காட்சியில் நான் மலேசியா முழுவதும் வருவது என் பெற்றோர்களுக்கு இன்னும் பெருமிதத்தை ஏற்படுத்தும் என்ற மகிழ்ச்சியும் எனக்குள் தோன்றியது எனலாம்.

 பத்திரிகையில் பணிபுரிந்த காலத்தில் என்னுடைய பெயர் கொண்டு வரும், ஒவ்வொரு செய்தியையும் என் அப்பா சேமித்ததுண்டு. அதனை இன்று வரை பொக்கிஷமாகப் பார்த்துக் கொண்டு வருகிறேன். அவ்வகையில் தொலைக்காட்சி தொகுப்பாளராகச் சிறந்த படைப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் எழுந்தது.

2007ஆம் ஆண்டு தொடங்கிய விருதுகள் நிகழ்ச்சி 2011ஆம் ஆண்டு  வரை திங்கள் முதல் வெள்ளி வரை 1000 எபிசோட்கள் கடந்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. விழுதுகள் நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல் எனக்கும் புகழை எட்டித் தந்தது.

விழுதுகளில் திங்கள் புதன்கிழமைகளில் ‘சுட சுட செய்தி’ என்ற ஓர் அங்கம் இருக்கும். அந்த அங்கத்தில் அன்றைய முக்கிய செய்திகளை 15 நிமிடங்களுக்குச் சொல்ல வேண்டும். தமிழ் பின்புலம் இல்லாததால் ஆங்கில பத்திரிக்கையில் உள்ள செய்திகளை மட்டுமே நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு சேகரிக்க ஆரம்பிப்பேன். ஆனால், ஒரு காலகட்டத்திற்கு பிறகு, தமிழ் வாசிப்பது கடினமாக இருந்ததால்தான் தமிழ் நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளை வாசிப்பதில்லை. ஆதலால், இனி தமிழை நன்கு கற்றுக்கொண்டு செய்திகளை வாசிக்க வேண்டும் என்பதனால் ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன்கிழமையும் காலை 4.30 மணிக்கு எழுந்து, பத்திரிக்கையை வாங்கி இரண்டு மணி நேரம் நானே வீட்டில் பயிற்சி செய்வேன். பிறகு, காலை 7.30 மணிக்கு விழுதுகள் நிகழ்ச்சி இடத்திற்கு சென்ற பிறகு அங்கேயும் எனது பயிற்சியைத் தொடர்வேன். அவ்வாறே தமிழ் செய்தித்தாள்களில் வெளியாகும் தமிழ் செய்திகளைச் சரளமாக வாசிக்க ஆரம்பித்தேன். இன்று நான் செய்த கடின உழைப்பைத் தமிழைச் சரளமாக வாசிக்கவும் பேசவும் துணை புரிகிறது எனலாம் என்றார் சுஷ்மிதா.

முதல்முறையாகத் தொலைக்காட்சியில் அறிமுகமான தருணம் எவ்வாறு இருந்தது?

- விழுதுகளின் முதல் எபிசோட் விருந்தினராகத்தான் டத்தோஸ்ரீ தம்பிராஜாதான் வந்திருந்தார். எனக்கும் என்னுடைய மற்றொரு தொகுப்பாளருக்கும் பதற்றமும் நடுக்கமும் அதிகம் இருந்தது. ஆனால், டான்ஸ்ரீ கொடுத்த ஆறுதல் வார்த்தையும் தன்னம்பிக்கையும் எங்களை அந்த எபிசோட் முழுவதும் சிறப்பாகச் செய்ய வழிவகுத்தது. இதன் வழி அந்த எபிசோடுகளுக்குப் பிறகு அனைத்து நாளிதழ்களும் விழுதுகள் நிகழ்ச்சியைப் பற்றி சிறந்ததொரு கருத்தை வெளியாக்கினர்.

விழுதுகள் செய்து கொண்டிருக்கும் பொழுது எண் கணிதம் என்ற நிகழ்ச்சியும் வழி நடத்துவதற்கு வாய்ப்பு எனக்கு கிட்டியது. வணிகத்தைத் தேடி, கருத்து பரிமாற்றம், தைப்பூச நேரலை என நிகழ்ச்சிகளைச் செய்ததுண்டு.

அதுமட்டுமல்லாமல், மக்களோடு மக்களாக இருந்து ஒரு சில நிகழ்ச்சிகளை நடத்தியதும் உண்டு. அவ்வப்போது இடம், பொருள் ஏவல் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்றார் போல ஒப்பனைகளையும் ஆடைகளையும் தேர்வு செய்து மக்களோடு மக்களாக நிகழ்ச்சியை நடத்தியதும். நான் இதுவரை பல நிகழ்ச்சிகளைச் செய்ததில்லை. காரணம் எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் என்னோடு மட்டுமல்லாமல் மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. நான் இதை செய்தால் மக்களின் கருத்தும் பார்வையும் எவ்வாறு இருக்கும் என்பதை ஆராய்ந்து ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் செய்து வந்தேன். அதுமட்டுமல்லாமல், என்னுடைய தோற்றத்தையும் நான் மாற்றிக் கொண்டேன் எனலாம். அதாவது ஆங்கில பத்திரிக்கையில் வேலை செய்யும் பொழுது நான் அணிந்த உடையும் தமிழ் ஊடகத்தில் வேலை செய்யும்போது நான் அணிந்த புடவையும் என்னுடைய தோற்றத்தைப் பிரதிபலித்ததோடு எனக்கு ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தியது.

தமிழ் பின்புலம் இல்லாமல் ஒரு சிறந்த அறிவிப்பாளராக ஆகியவருக்கும் தமிழ் பின்புலம் இருந்தும் ஆங்கில கலப்போடு பேசும் அறிவிப்பாளர்களுக்கும் என்ன வேறுபாடு?
இது மிகவும் ஒரு அடிப்படை தவறாகத்தான் நான் பார்க்கிறேன். வீட்டில் பெற்றோர்கள் முதலில் தமிழில் உரையாட வேண்டும். அதனைத் தொடர்ந்துதான் அனைவரும் வெளியிடங்களிலும் தமிழை உரையாடுவர். ஆனால், தற்பொழுது சமூக ஊடகங்கள் அனைத்திலும் பிறமொழிக் கலப்புகள்தான் அதிகமாக உள்ளது. ஆகையால், அன்றாட வாழ்வில் அதையே சார்ந்து உள்ளதால் பேச்சு வழக்கிலும் ஆங்கில கலப்பை நாம் அதிகம் சேர்க்கின்றோம். பள்ளிகளிலும் முந்தைய காலத்தில் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களாக இருந்தாலும் அறிவியல், கணக்கு போன்ற பாடங்களைக் கற்பிக்கும் பொழுது தமிழில் உரையாடுவர். ஆனால், இன்றோ தமிழ் பாடத்தைத் தவிர்த்து, தமிழ் ஆசிரியர்களாக இருந்தாலும் பிற பாடங்களைப் போதிக்கும் பொழுது ஆங்கிலம், மலாய் மொழியில்தான் உரையாடுகின்றனர். என்னைப் பொறுத்தமட்டில், நாங்கள் தமிழில் வீட்டில் உரையாடுவதுதான் என் பிள்ளைகள் தேவாரம் ,சங்கீத வகுப்புகளைக் கற்று தமிழில் சிறந்து விளங்குகின்றனர் என்று கருதுகிறேன்.



தமிழைப் பேசுவதற்கு மக்கள் வெட்கப்படுகிறார்களா?

நான் என்னுடைய ஒவ்வொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுதும் ‘தாய் தந்தை தந்த தமிழுக்கு நன்றி’ எனக் கூறித்தான் ஆரம்பிப்பேன். ஏனெனில், என் தாய், தந்தை புகட்டிய தமிழ்தான் என்னை வளர்த்து உள்ளது. ஆனால், தற்போதைய மக்கள் தமிழ் பேசுவதற்கு கூச்சப்படுகிறார்களா அல்லது தமிழை நினைத்துக் கூச்சப்படுகிறார்களா என்றுகூட தெரியவில்லை. என்னை பொறுத்தமட்டில், தமிழன் என்ற கர்வம் எங்கு சென்றாலும் நமக்கு இருப்பின் தமிழைப் பேசுவதற்கு ஐயப்பட மாட்டோம். நம் அடையாளம் நாம் உடுத்தும் உடைகளிலும் பேசும் மொழிகளிலும் மட்டுமே அடங்குகின்றது. அதுமட்டுமல்லாமல், கலை கலாச்சாரங்கள், சாங்கிய சம்பிரதாயங்கள் முதல் கொண்டு நாம் இன்று கற்று தந்தால் மட்டுமே நாளை நம் சமுதாயத்தினர் பின்பற்றுவர்.

ஓர் அறிவிப்பாளராக இருப்பதற்கு என்ன தேவை?

முதலில், அறிவிப்பாளருக்கு நாவடக்கம் மிக முக்கியம். உள்ளமும் மனதும் தூய்மையாக இருப்பின் வார்த்தைகளும் தூய்மையாகவும் பணிவாகவும் வெளிவரும். அவ்வேளையில் நாம் கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு செய்தியும், கருத்தும், ஆதங்கமும் கொச்சை வார்த்தைகளில் இல்லாமல் சிறந்த வார்த்தைகளில் அமைந்தால் நாம் சொல்லும் கருத்தும் மக்களிடம் சரியாக போய்ச் சேரும். அதுமட்டுமல்லாமல், நமக்கு வழங்கப்படும் ஸ்கிரிப்பை அப்படியே வாசிக்காமல், அதனை உள்வாங்கி கருத்துகளைப் புரிந்து கொண்டு அதனைப் பற்றி ஆராய்ந்து பேசுவது மிகச் சிறந்தது. இந்தத் திறன் இருந்தாலே போதுமானது.

சமூக வலைத்தளங்கள் நம் இளைஞர்களைச் சிறந்த வழிக்கு இட்டுச் செல்கின்றதா?

தொழில்நுட்பம் என்பது காலத்திற்கு ஏற்றாற் போல் மாறத்தான் செய்யும். அதற்கேற்றாற் போல் நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற விஷயங்கள் நம் தொழிலையும் நம்மையும் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். குறுக்கு வழியில் சேட் ஜிபிடி மூலம் பல விஷயங்களை அடைந்தாலும் நாளை அது நம் படைப்பை மேலோங்கச் செய்யுமே தவிர தனி நபரை மேலோங்கச் செய்யாது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இத்தனை வருட கால அனுபவத்தில் என்றாவது தோற்றுவிடுவோமோ என்ற எண்ணம் தோன்றியது உண்டா?

நிச்சயமாக இல்லை. விழுதுகள் செய்ய ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே நிச்சயமாகத் தொலைக்காட்சி, ஊடகத்தில் நம்மால் வெகு நாள் பணிபுரிய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். ஏனெனில், ஒரு படைப்பாளர் என்னும் பொழுது நமக்கான வாய்ப்புகள் மலேசிய நாட்டில் அதுவும் இரண்டு முதல் மூன்று தமிழ் ஊடகங்கள் உள்ள இடத்தில் வெகு நாள் வாய்ப்பு கிடைப்பது குறைவு. 

ஆகவே, இதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் எழுந்தது. அப்பொழுதுதான்  2010ஆம் ஆண்டு மனிதவள அமைச்சரான சுப்பிரமணியம் அவர்களை நேர்காணல் செய்ய வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது மனிதவள அமைச்சர் அறிமுகப்படுத்திய ‘ட்ரெயின் அண்ட் ஸ்பேஸ்’ என்ற திட்டத்தைப் பற்றி அவர் விழுதுகளில் பகிர்ந்து கொண்டார். அப்பொழுதுதான் ஏன் நாம் இதை செய்யக்கூடாது என்ற ஆசை தோன்றியது. மலேசியாவில் நிறைய இந்தியர்கள் வேலையில்லாப் பட்டதாரியாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே, தொழில்நுட்ப வல்லுரரான என்னுடைய கணவரிடம் இந்த திட்டத்தைப் பற்றி கூறி, சுயமாக ஒரு நிறுவனத்தை நிறுவினோம். அதுதான் அரேனா அகாடமி கடந்த 15 ஆண்டுகளாகச் சிறந்த சேவையை வழங்கி வருகிறது.

பெண்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கு குறிப்பாகப் படிப்பில்லாதவர்கள், குடும்ப வாழ்க்கையில் சிக்கலை எதிர் நோக்குபவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் போன்றவர்க்கு ஒப்பனை, சிகை அலங்காரம், தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வந்துள்ளேன். யாரையும் சார்ந்து வாழாமல் கைத்தொழில் நம்மை காப்பாற்றும் என்ற கருப்பொருளோடுதான் இதனை ஆரம்பித்தேன். இதில் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றதுண்டு.

இதுவரை பணத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட அரேனா அகாடமி தற்பொழுது சமூக சேவையாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு சாரா இயக்கம் ஒன்றை நிறுவி 15  தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இத்திட்டம் அண்மையில்தான் தொடங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களோடு உடல் ஊனமுற்ற மக்களுக்கும் இலவசமாகப் பயிற்சிகளை வழங்கி நாடு தழுவிய அளவில் அவர்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதே இந்த இயக்கத்தின் நோக்கமாக உள்ளது.

இன்றைய காலகட்டத்தில், பெண்கள் வீட்டு பொறுப்புகளைச் சுமந்து கொண்டு பூ கட்டுவது, தையல் துறையில் ஈடுபடுவது, சிகை அலங்காரம், கோலம் போடுதல் போன்ற நமது கலைகளை ஆண்களுக்கு விட்டுத் தருகின்றனர். ஆனால், அதை மீண்டும் கொண்டு செல்வது நமது தலையாயக் கடமையாகும். ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்பது போல நமக்கென ஒரு கைத்தொழில் இருந்தால் நிச்சயமாக நாம் நம்மை பார்த்துக் கொள்ளலாம். மலாய்காரர்கள், சீனர்களுக்கு நிறைய உதவிகள் ஆதரவுகள் கிடைக்கின்றன. ஆனால், நம் இந்திய பெண்மணிகளுக்கு நாம்தான் ஆதரவு தர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.



உங்களுக்கு கிடைத்த விருதுகள் யாவை?

எனக்கு முதல் விருது என்றால் விழுதுகளின் வழி மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததுதான். அதற்கான நற்சான்றிதழ் கொடுக்கும் பொழுது என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. ஏனெனில், நான் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதுமட்டுமல்லாமல் இதுவரை ம.இ.கா வழி இரண்டு முறை பெண் சாதனையாளர் விருது பெற்றுள்ளது. அதன் பிறகு, தேசம் விருதின் வழி, மும்மொழி அறிவிப்பாளர் என்று விருதும் கிடைத்தது. ஆஸ்ட்ரோவிலும் சில நிகழ்ச்சிகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டதோடு மனிதவள அமைச்சின் கீழ் நிறைய திட்டங்கள் செய்து வருவதால் சிஎஸ்ஆர் விருதும் எனக்கு வழங்கப்பட்டது.

நமது மலேசியக் கலைத்துறையில் கலைஞர்களுக்குச் சரியான அங்கீகாரம் வழங்கப்படுகின்றதா??

என்னைப் பொறுத்தமட்டில், மலேசியாவில் கலைஞர்களுக்கான சரியான அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. ஏனெனில், நம்மிடம் ஒப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது. அதாவது மலேசிய திரைப்படத்தையும் இந்திய திரைப்படத்தையும் ஒன்றாக ஒப்பிட்டு மலேசிய திரைப்படத்தின் தரம் குறைவாக இருப்பதாகக் கருத்துரைக்கிறோம். ஆனால், இந்தியாவின் திரையுலகம் 1930களில் ஆரம்பித்த ஒன்றாகும். அவ்வகையில் பார்த்தோமானால், மலேசியாவின் கலைத்துறை, மலேசியத் திரைப்படங்கள் மிகவும் குறுகிய காலகட்டத்தில் மட்டும்தான் திரையரங்குகளில் வெளியிடவே ஆரம்பித்தது. ஆக, நமக்கான நேரமும் காலமும் இன்னும் அதிகம் உள்ளது.
ஆனால், இதனை யாரும் புரிந்து கொள்ளாமல் மலேசியக் கலைத்துறையும் சரி, ஊடகங்களும் சரி கலைஞர்களுக்குத்தான் அங்கீகாரம் கொடுக்காமல் இருக்கின்றனர். நம்முடைய கலைத்துறை அதிகம் வெளிநாட்டு நடிகர்களையும் இசையமைப்பாளர்களையும் நம் படத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நம் நாட்டிலே வளர்ந்து வரும் கலைஞர்களும், இசையமைப்பாளர்களும், பாடகர்களும் இருக்கிறார்கள். நாம் வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவர்களின் திறன் வெளிவரும். ஒரு தவற்றிலிருந்துதான் சரியான ஒன்றை கற்றுக் கொள்ள முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பை நாம் கொடுக்காவிட்டால் நம்முடைய இளைஞர்கள் எங்கு செல்வார்கள்?

மக்கள் அறிந்திராத சுஷ்மிதாவின் தனித்திறமைகள் யாவை?

நம் இந்திய சமுதாயத்தில் ஆயக்கலைகள் 63 என்பது நமக்குத் தெரியும். அவ்வகையில் எண் கணிதம், ஜாதகம். இவை அனைத்தையும் பார்ப்பதற்கு எனக்கு மிகப் பிடிக்கும். சிறுவயதிலிருந்தே இதில் ஆர்வம் இருந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெயர் சூட்டுவது, பெயர் மாற்றுவது போன்ற செயல்களை இதுவரை செய்து வந்துள்ளேன். குறிப்பாகக், குழந்தைகளுக்குப் பெயர் இடுவது என்பது வெள்ளை காகிதத்தில் ஒரு புள்ளியை வைப்பது போன்றது. அதை முறையாக வைத்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை வெளிச்சமாகும். அவ்வகையில் ஒவ்வொரு முறை பெயர் வைக்கும் பொழுது நிறைய ஆராய்ச்சிகள் செய்து அவர்களுக்குப் பெயர் சூட்டுவேன்.

அதுமட்டுமல்லாமல், மனிதர்களுக்கு ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஒரு பிரச்சனை வரும். அதற்கான தீர்வை நோக்கி செல்வர். தீர்வை நோக்கி செல்லும் பொழுது நமக்குத் தெரிந்த ஒரே தீர்வு கடவுள்தான். இறை சார்ந்த பல விஷயங்களை ஆராய்ந்து வருகிறேன். குறிப்பாக, சிவனை வணங்குபவர்களுக்கு உத்திராட்சம் அணிவதுதான் ஒரு தீர்வு. சிவனின் கண்ணீர் துளிகள்தான் உத்திராட்சம் என்று கூறுவர். ஆக 22 உத்திராட்ச முகத்தைப் பற்றியும் ஆராய்ந்து உள்ளேன். ஒவ்வொரு முகத்திற்கும் என்ன பலன்? எவ்வாறு அது வாழ்க்கையுடன் ஒத்துப் போகிறது? என்பதை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து உள்ளேன். அதுமட்டுமல்லாமல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது, மூன்று முடிச்சு செய்து திருமணம் செய்வது, ஆடியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது போன்ற நமது கலாச்சார விஷயங்களை ஆராய்ந்து அதனை முறையே செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கலைகள் யாவும் மறக்கப்படாமல் மறையப்படாமலும் இருப்பதை உறுதி செய்து, தற்பொழுது அதனை மீண்டும் உணர்த்தி வருகிறேன். இது பலருக்கு தெரியாது.

தொகுப்பாளர்களில் உங்களுக்குப் பிடித்த முன்மாதிரி யார்?

எனக்கு ஓப்பரா வின் ப்ரீ அவர்களை பிடிக்கும். சிறுவயதில் அவர் வன்புனர்வு செய்யப்பட்டார். வாழ்க்கையில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பல தடைகளைத் தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர்தான் அவர். அவரின் தன்னம்பிக்கையும் கர்வமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளும் துணிச்சலாகவும் அவரின் தைரியத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும். அவரைப் போன்று தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆசை உண்டு.

நீங்கள் நிறைய நிகழ்ச்சிகளைப் படைத்ததுண்டு. அதில் எந்த நிகழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று எண்ணி உள்ளீர்கள்??

மலேசியாவில் பெண்கள் பேசினால் என்ற நிகழ்ச்சி செய்தார்கள். பெண்கள் பேசினால் நிறைய பேசலாம். அந்த வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், விவாகரத்து, குடும்ப பிரச்சனை, குடும்ப வன்முறை போன்ற விஷயங்களைப் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டால் அவர்களிடலிருந்து நிறைய ஆதங்கமும் தகவல்களும் வெளிவரும். ஆக இத்தகைய பெண்களை அழைத்து நேர்காணல் செய்தால் அந்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதும் தோன்றும். அதனை நானே அறிவிப்பாளராக இருந்து செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் நபர்கள் யார்?

முதலில் என் பெற்றோர்களுக்கு நன்றி. என்னுடைய வளர்ச்சிக்காக எப்பொழுதும் துணை நின்றவர்கள் என் பெற்றோர்கள். நிச்சயம் இந்த நேர்காணல் படைப்பை என் தந்தை பார்த்திருந்தாலும் பெருமைப்பட்டிருப்பார். ஆனால்,  கண்டிப்பாக எப்பொழுதும் அவரின் ஆசிர்வாதம் எனக்கு இருக்கும் என நம்புகிறேன். அதோடு, என்னை சார்ந்தவர்கள், என்னுடன் இருக்கும் பலருக்கும் நன்றி. ஏனெனில், என்னுடன் சேர்ந்து மற்றவர்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கும் நன்றி. அதோடு, வாய்ப்பு கொடுத்த தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிகை ஊடகங்கள் அனைத்திற்கும் நன்றி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நிலையில் இறைவனுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நமது மலேசிய இந்திய கலைத்துறையில் பீடுநடைபோட்டு இன்றும் தன் தமிழ் மொழிக்கும், தமிழருக்கும் தமிழ் மங்கையாக வலம் வரும் சுஷ்மிதா முருகன் அவர்களுக்கு தமிழ் மலரின் வாழ்த்துகள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *