தற்கால ஆய்வு அணுகுமுறையில் தொல்காப்பியம்!
- Writer Tamil
- 30 Dec, 2025
தொல்காப்பியம்
தமிழ் மொழியின் மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இலக்கண நூல்களில் ஒன்றாகும்.
தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியக் கோட்பாடுகளுக்கான அடிப்படை நூலாகப் போற்றப்படும்
தொல்காப்பியத்தை, நவீன ஆய்வுக் கண்ணோட்டத்தில், மொழி மற்றும்
பண்பாட்டின் முறையான அறிவியல் பதிவாகவும் புரிந்துகொள்ளலாம். தர்கால ஆய்வு
அணுகுமுறை கண்ணோட்டத்தில் ஆராயும்போது, தொல்காப்பியம் தரவியல்
ஆய்வுமுறையுடன் தொடர்புடைய பல அம்சங்களை வெளிப்படுத்துகிறது. அவை உற்றுநோக்கல்,
கட்டமைக்கப்பட்ட பகுப்பாய்வு, கோட்பாட்டு
உருவாக்கம் மற்றும் முந்தைய ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் நம்பகத் தன்மை போன்றவையாகும்.
இந்தக் கட்டுரை தற்கால ஆய்வு அணுகுமுறையின் முக்கிய கூறுகளுடன் தொல்காப்பியத்தின்
அமைப்பு மற்றும் உள்ளடக்கத்தை ஒப்பிட்டு ஆராய்கிறது.
தொல்காப்பியமும் அறிவியல் பதிவு கருத்தாக்கமும்
அறிவியல்
பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பான தரவுகளின் முறையான சேகரிப்பு, ஆவணப்படுத்தல்,
பகுப்பாய்வு மற்றும் விளக்கத்தைக் குறிக்கிறது. மொழியியல் மற்றும்
பண்பாடு சார்ந்த ஆய்வுகளில், பேச்சு மொழி, எழுத்து மொழி, சமூக
நடைமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் மரபுகளை உள்ளடக்கியுள்ளது.
தொல்காப்பியம் தமிழின் மொழியியல் அமைப்பை ஆவணப்படுத்தி, அதை
அதன் சமூகப் பண்பாடு மூலங்கள் வழி இந்த அளவுகோல்களைப் பூர்த்தி செய்கிறது. இந்த
நூல் வெறுமனே விதிகளைப் பரிந்துரைக்கவில்லை; மாறாக, முந்தைய இலக்கிய மரபுகளை வெளிபடுத்திக் காட்டுகின்றது.
அத்தகைய
அறிவியல் பதிவின் வாயிலாக மொழியியல் அறிவைப் பாதுகாக்கவும், வரலாற்று மொழி
வளர்ச்சி பற்றிய நுண்ணறிவு வழங்கவும், பண்பாட்டு
அடையாளத்தைப் பாதுகாக்கவும் தொல்காப்பியம் வழிசெய்கிறது.
தொல்காப்பியத்தின் பொதுவான கண்ணோட்டம்
தொல்காப்பியம்
மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- எழுத்ததிகாரம் - எழுத்துகள்
மற்றும் ஒலிகளை (ஒலியியல்) விவரிக்கிறது.
- சொல்லதிகாரம் - சொற்கள்
மற்றும் அவற்றின் உருவாக்கத்தில் (உருபனியல்) கவனம் செலுத்துகிறது.
- பொருளதிகாரம் – பொருண்மை
மற்றும் பண்பாட்டுச் சூழலை (பொருளியல், பயன்படுத்துவியல்
மற்றும் இலக்கியக் கோட்பாடுகள்) விவரிக்கிறது.
இந்தப்
பிரிவுகள் தமிகழ்மொழியின் அமைப்பையும் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த விளக்கத்தையும்
வழங்குகின்றன. இலக்கணத்திற்கு அப்பால், தொல்காப்பியம் தமிழின் உலகக் கண்ணோட்டம், நெறிமுறைகள்
மற்றும் இலக்கிய மரபுகளை பிரதிபலிக்கிறது. ஆகவே, இது மொழியியல் மற்றும் பண்பாட்டு ஆவணமாக
அமைகிறது.
தொல்காப்பியத்தில் ஆய்வு வடிவம்
ஆய்வு அணுகுமுறை
பண்புசார் அல்லது தரவியல் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டதாக
அறியப்படுகிறது. தொல்காப்பியர் தற்போதுள்ள இலக்கியப் படைப்புகள் மற்றும்
நிறுவப்பட்ட மொழியியல் நடைமுறைகளைப் பதிவு செய்துள்ளார். இது "வழக்கும்
செய்யுளும் ஆயிரு முதலின்" போன்ற குறிப்புகளால் சுட்டிக்காட்டப்படுகிறது, இவை, தமிழ் மொழி
பயன்பாடும் செய்யுள் இயற்றும் மரபையும் முதன்மை தரவு ஆதாரங்களாக
வலியுறுத்துகின்றன.
இந்த வடிவம்
நவீன தரவியல் அல்லது பண்புசார் ஆய்வு அணுகுமுறையோடு பொருந்துகிறது, இது விரிவான
விளக்கங்களை உருவாக்குவதையும், பொருத்தமான இடங்களில்,
கோட்பாட்டு மாதிரிகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆய்வுச் சிக்கல்
ஓர்
ஆய்வுக்கு அடிப்படையாக அமைவது ஆய்வுச் சிக்கல் ஆகும். தொல்காப்பியத்தில், தொல்காப்பியரால்
அடையாளம் காணப்பட்ட ஆய்வுச் சிக்கல் மொழிச் சிதைவு, மொழித்
தரப்படுத்தபடாமல் இருத்தல், தமிழ்மொழிக்கு தரப்படுத்தப்பட்ட
இலக்கண கட்டமைப்பு இல்லாமை ஆகியவற்றை உள்ளடக்குகிறது. தொல்காப்பியம் இயற்றப்பட்ட
காலத்தில், தமிழ்மொழி பல்வேறு வடிவங்களில் அதாவது வட்டார
வழக்கை அடிப்படையாகக் கொண்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் அமைப்பை
ஒழுங்குபடுத்தவும் பாதுகாக்கவும் விரிவாக எழுதப்பட்ட இலக்கணம் இல்லை.
மொழித்
தூய்மை மற்றும் தொடர்ச்சிக்குச் சாத்தியமான அச்சுறுத்தலை உணர்ந்த தொல்காப்பியர், இலக்கண விதிகளை
குறியீடு செய்வதன் மூலம் இந்தச் சிக்கலை முன்வைக்கின்றார். இந்தச் சிக்கல்களை
அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணும் நோக்கங்களை தொல்காப்பியர் முன்வைக்கின்றார்.
ஆய்வின் நோக்கங்கள்
தொல்காப்பியத்தின்
நோக்கங்கள் தற்கால மொழியியல் ஆராய்ச்சியில் வெளிப்படுத்தப்பட்டவற்றுடன் மிக
நெருக்கமாக ஒத்திருக்கின்றன. அவற்றில் சில பின்வருமாறு:
- தமிழ் ஒலிகள் மற்றும்
உச்சரிப்பை விவரித்தல்.
- உயிர், மெய்,
உயிர்மெய் ஆகிய ஒலிகளைப் பகுப்பாய்வு செய்தல்.
- எழுத்துத் தொகுதி
அமைப்பு, அழுத்த வடிவங்கள் மற்றும் ஒலியழுத்தத்தை விளக்குதல்.
- வேற்றுமை உருபுகள் உட்பட
சொல் உருவாக்கத்தை ஆராய்தல்.
- வாக்கிய அமைப்பு மற்றும்
பொருண்மையை நிர்வகிக்கும் தொடரியல் விதிகளை விவரித்தல்.
இந்த
நோக்கங்கள் ஒலியியல், உருபனியல், தொடரியல் ஆகியவற்றை உள்ளடக்கிய
தொல்காப்பியத்தின் விரிவான எல்லையை வெளிப்படுத்துகின்றன.
தரவு மூலம்
ஆய்வு
அணுகுமுறையில் முக்கியமான ஒன்றாக அமைவது தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கான
முறையான கட்டமைப்பு ஆகும். தொல்காப்பியத்தில், தரவு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட
தமிழ் நூல்களின் தொகுப்பாக அமைகிறது. இருந்தபோதிலும், மக்கள்
அன்றாட வழக்கில் பயன்படுத்திய மொழிப் பயன்பாட்டையும் எழுத்து மொழி பயன்பாட்டையும்
உற்றுநோக்கல் வழியும் நேர்க்காணல் வழியும் செய்திருக்கக் கூடும் என்பது நாம் அறிய
முடிகிறது.
ஆய்வுக் கருவிகள்
தொல்காப்பியத்தில்
உற்றுநோக்கல் முதன்மை ஆய்வுக் கருவியாக செயல்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. மொழிப்
பயன்பாட்டில் தொல்காப்பியர் உற்றுநோக்கல் வழி அடையாளம் கண்ட குறியீடுகளைக் கொண்டு இலக்கண
விதிகளை உருவாக்கியுள்ளார். இந்த விதிகளைத் தமிழ்மொழிக்கு மட்டுமல்லாமல், ஒத்த
கட்டமைப்புகளைக் கொண்ட பிற மொழிகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பீட்டுக் கட்டமைப்புகளாகவும்
பொருந்தக்கூடிய கோட்பாட்டு மாதிரிகளாகக் கூட காணலாம்.
ஆய்வு வரம்பு மற்றும் ஆய்வு எல்லை
தொல்காப்பியம்
வரம்புகள் மற்றும் எல்லைகள் பற்றிய விழிப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. அதன்
இலக்கணப் பகுப்பாய்வு முதன்மையாக எளிய வாக்கிய அமைப்புகளைக் குறிப்பிடுகிறது
மற்றும் தொடர் வாக்கியங்கள் ஓரளவு இருந்தபோதிலும் கலவை வாக்கியங்கள் பற்றி விரிவாக
உள்ளடக்கப்படவில்லை. அக்காலகட்டத்தில் அந்த அதற்கான தேவையும்
இல்லாதிருந்திருக்கிறது என்றுகூட கூறலாம். கூடுதலாக, இந்த நூல் இரண்டாவது மொழி கற்பவர்களை
விட தமிழ் தாய்மொழி பேசுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுவும் ஆய்வு
வரம்பாகப் பார்க்கப்படுகிறது.
எல்லை
வரையறையின் அடிப்படையில், தொல்காப்பியர் புவியியல், மொழியியல் மற்றும்
காலரீதியாக ஆய்வின் எல்லையை தெளிவாக வரையறுக்கிறார். வடவேங்கடம் மற்றும் தென்குமரி
இடையே பேசப்படும் தமிழில் கவனம் செலுத்துதல், தரமான தமிழ்
மற்றும் செய்யுள் மொழியை வலியுறுத்துகிறது. காலரீதியான சட்டகம் பாண்டிய காலத்துடன்
தொடர்புடையது, தோராயமாக கி.மு. 4-ஆம்
நூற்றாண்டு எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த எல்லைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு
எல்லைக்குள் தெளிவு, பொருத்தம் மற்றும் ஆழத்தை
உறுதிப்படுத்துகின்றன.
பதிவு செய்யப்பட்ட மொழியியல் மற்றும் பண்பாட்டு
தரவுகள்
தொல்காப்பியம் ஒலியியல், உருபனியல், தொடரியல், பொருளியல் போன்ற மொழியியல் கூறுகளை முறையாகப் பதிவு செய்கிறது. அதே நேரத்தில், சமூக விதிமுறைகள், இலக்கிய மரபுகள் மற்றும் திணை வகைப்பாடு உட்பட பண்பாட்டுக் கூறுகளை ஆவணப்படுத்துகிறது, இது மனித அனுபவத்தை நிலத்தோடும் உணர்ச்சியுடனும் இணைக்கிறது. மொழி மற்றும் பண்பாட்டின் இந்த ஒருங்கிணைப்பு முழுமையான அறிவியல் பதிவாக நூலின் மதிப்பை வலுப்படுத்துகிறது.
தற்கால ஆய்வு அணுகுமுறை கட்டமைப்பின் மூலம் பார்க்கும்போது, தொல்காப்பியம் மொழி மற்றும் பண்பாடு பற்றிய அறிவியல் அணுகுமுறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிக்கல்களின் தெளிவான அடையாளம், நன்கு வரையறுக்கப்பட்ட நோக்கங்கள், முறையான அணுகுமுறை மற்றும் அனுபவ உற்றுநோக்கலின் வழி நம்பிக்கை ஆகியவை அதை அறிவார்ந்த நிலையில் படைக்கப்பட்ட ஓர் ஆய்வுநூலாகப் பார்க்கப்படுகிறது. அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்கு அப்பால், தொல்காப்பியம் நவீன மொழியியல், பண்பாட்டு ஆய்வுகள் மற்றும் ஆய்வு அணுகுமுறைக்கு அறிவியல் பதிவாகப் பார்க்கப்படுகிறது. இவ்வாறான அணுகுமுறை பொதிந்த இந்நூல் நம் தமிழர்களுக்குக் கிடைத்ததை எண்ணி நாம் பெருமைக்கொள்ள வேண்டும்; இதனை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
ஆக்கம்,முனைவர் செல்வஜோதி இராமலிங்கம், மலாயாப் பல்கலைக்கழகம்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



