இங்கிலாந்துக்கான பயணம் மூலம் வெ1,100 கோடி முதலீடு கிடைத்துள்ளது!

top-news
FREE WEBSITE AD

லண்டன், ஜன. 19

இங்கிலாந்துக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஐந்து நாள் அதிகாரப்பூர்வ பயணம், மொத்தம் 1.100 கோடி வெள்ளி முதலீடுகளைக் கவர்ந்துள்ளது.அம்முதலீடுகள் புதுப்பிக்கத்தக்க எதிர்பொருள் மற்றும் இலக்கவியல் பொருளாதாரத் துறைகள் உட்பட பல்வேறு துறைகள் மூலம் பெறப்பட்டிருப்பதாக, அன்வார் வெள்ளிக்கிழமை இரவில் மலேசிய செய்தியாளர்கள் மத்தியில் லண்டனில் அறிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 50 கோடி வெள்ளி கிடைக்கக் கூடிய சாத்தியத் துறையாக ஏற்றுமதி இருப்பதாகவும் ஏற்றுமதி செய்யப்படக் கூடிய பொருட்களில் விமானச் சாதனங்கள் மற்றும் அதன் உபரி பாகங்கள், மரத் தளவாடப் பொருட்கள் மற்றும் உணவு மற்றும் குளிர்பானங்களும் அடங்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

மலேசியாவின் பொருளாதாரம் மீது வலுவான அனைத்துலக நம்பிக்கை இருப்பதையும் இங்கிலாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கணிசமாக அதிகரித்திருப்பதையும் இந்த மேம்பாடு பிரதிபலிப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்."மலேசிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகம், மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு ஆகியவற்றின் மூலம், இங்கிலாந்தின் வர்த்தகத் தலைவர்களுடனான கலந்துரையாடல்களின்போது, மலேசியாவில் முதலீடு செய்வதற்கான ஆர்வமும் தயார்நிலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன" என்று அன்வார் தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கான தமது ஐந்து அலுவல் பயணத்தின்போது, ஸ்டெண்டர்ட் சார்ட்ரெட் மற்றும் ஜக்குவார் லேண்ட் ரோவர் உட்பட இங்கிலாந்தின் பல பெரிய தொழில்துறை கழகங்களின் தலைவர்களையும் அன்வார் சந்தித்திருக்கின்றார்.

பிரதமர் கீர் ஸ்டாமர் தலைமையிலான இங்கிலாந்து அரசாங்கம், மலேசியாவுடனான தனது உறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த விரும்புவதாகவும் அதன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னாலிசி டாட்ஸ் அடுத்த மாதம் மலேசியா வரவிருப்பதாகவும் அன்வார் கூறினார்.

அன்னாலிசியின் வருகைக்குப் பிறகு மார்ச் மாதத்தில், இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் துறை அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் மலேசியா வரத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமராக பதவியேற்ற பின்னர், இங்கிலாந்துக்கு அன்வார் முதன் முதலாக ஐந்து நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *