உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை - பாக்யராஜ்!
- Muthu Kumar
- 31 Mar, 2026
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் 'லீடர்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.ஷாம், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இப்படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜ், "லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசுவதை நான் கேட்டுக் கொண்டேதான் இருந்தேன். அதிலிருந்து எனக்கு தெளிவாகப் புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததைத் தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவார்.
அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். 50 வயதைத் தாண்டி அவர் நடிக்க வந்திருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனால், 25 - 30 வயதிற்கான உடலை அவர் வைத்திருக்கிறார். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. 'லெஜெண்ட்' படத்திற்குப் பிறகு 'லீடர்' என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது.
இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு இது சவாலான முயற்சிதான். டிரெய்லரைப் பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்பே காட்டுகிறது.படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் அது உருவாக்கியுள்ளது. இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இருக்கும்.
சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை. அவர் நினைத்ததைச் சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார்.அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவி செய்ய வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



