துன் சாமிவேலுவின் சகாப்தம்! மனம் திறந்த தலைவர்கள்! - மலாயாப் பல்கலைக்கழகம்!
- THINAGAREN SANGGAREN
- 16 Jun, 2026
ஜூன் 12,
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்
துறையின் ஏற்பாட்டில் துன் சாமீவேலுவின் சகாப்தம் எனும் நிகழ்ச்சி ஓம்ஸ்
அறவாரியத்தின் ஆதரவில் கடந்த ஜூன் 11 நடைபெற்றது. மூத்த அரசியல் தலைவரும்
ம.இகாவின் முன்னாள் உதவித் தலைவரும் முன்னாள் துணை அமைச்சருமான TAN SRI
KUMARAN, ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநரும் அரிமா
சங்கத்தின் தலைவருமான OMS PA.THIAGARAJAN, ம.இ.காவின்
முன்னாள் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான Tan Sri S. Subramaniam போன்ற துன் சாமிவேலுவின் காலத்து அரசியல் தலைவர்கள் பலரும்
இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்ததுடன் துன் சாமிவேலுவின் நிறைகளையும்
குறைகளையும் பொதுவில் பகிர்ந்தனர்.
துன் சாமிவேலுவின் நண்பரும் அரசியல்
தோழருமான TAN SRI KUMARAN, துன் சாமிவேலுவின் ஆரம்பக் கால
அரசியல் குறித்து விரிவாக விளக்கினார். பேராக்,
சிலாங்கூர் ஆகிய இரு மாநிலங்களிலும் ம.இ.காவைச் செய்த சீர்திருத்தங்கள் குறித்தும்
1967 ஆம் ஆண்டு மலேசியா இந்தோனேசியா இடையில் ஏற்பட்ட அரசியல் போரில் துன்
சாமிவேலுவின் துணிச்சல் மிகுந்த செயல்களையும் TAN SRI KUMARAN நினைவூட்டினார். நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல துன்
சாமிவேலுவுக்கும் நிறையும் குறையும் உள்ளது என்பதை ஒரு நண்பராக நான் அறிவேன் என TAN
SRI KUMARAN வெளிப்படையாகத் தெரிவித்தார்.
2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் துன்
சாமிவேலு 1,821 வாக்குகள் வித்தியாசத்தில்
பி.கே.ஆரின் MICHAEL JEYAKUMAR DEVARAJ என்பவரிடம்
தோல்வி அடைந்ததற்கு நானும் ஒரு காரணம் என ஓம்ஸ் பா தியாகராஜன் மனம் திறந்து
பேசினார். ஆனால், தேர்தலுக்கு முந்தைய நாள்
சாமிவேலுவுக்கு எதிராக அம்னோவின் ஒரு பிரிவினர் செயல்படுகிறார்கள் என்பதை
அறிந்ததும் துன் சாமிவேலுவின் மகனான வேள்பாரியின் மூலமாகத் தெரியப்படுத்தினேன். ஆனால் சாமிவேலு அதை செவிசாய்க்கவில்லை. எனக்கும் துன்
சாமிவேலுவுக்கும் இடையில் பல முரண்பட்ட கருத்துகள் இருந்தது,
ஆனால் தனிப்பட்ட முறையில் துன் சாமிவேலுவை நான் மதிக்கிறேன்.
அவரால் இயன்றதை இந்திய சமூகத்திற்குச் செய்தார் என்பதில் தனக்கு மாற்றுக்
கருத்தில்லை. ஆனால் அவர் செய்ததை விடவும் அதிகமாகவும் அவரால் செய்திருக்க முடியும்
என்பதை மட்டும் ஓம்ஸ் பா தியாகராஜன் வலியுறுத்தினார். தேர்தலில் துன் சாமிவேலு
தோல்வி அடைந்த பின்னர், அவரின் அருகில் அமர்ந்து ஒரு
நிகழ்ச்சியில் அவரிடம் நான் “சுங்கை சிப்புட்டில் உங்களுக்கு எதிராகப் பிரச்சாரம்
செய்தேன்” என வெளிப்படையாக அவரிடம் தெரிவித்தேன்.
அவருடைய முகத்துக்கு நேராகப் புன்னகைத்தே நான் அதைச் சொன்னேன். எனக்கும் அது
தெரியும், என துன் சாமிவேலு தெரிவித்தார். துன்
சாமிவேலுவின் இறுதி காலத்தில் நேரடியாக அவருடன் பேசி பழகினே. என்னுடைய தாயார்
இறந்த போது துன் சாமிவேலு என் இல்லம் தேடி வந்து ஆறுதல் கூறியதுடன் என் தாயாருக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் தேவாரம் ஓதினார். அவர் மீதான என்னுடைய விமர்சனம் என்பது
இந்திய சமூகத்திற்கானதாக மட்டுமே இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் துன்
சாமிவேலுவின் மீதான மரியாதை இன்றும் இருக்கிறது என ஓம்ஸ் பா தியாகராஜன் மனம்
திறந்து பேசினார்.
மகாதீரின் காலத்தில் இந்தியர்களுக்கான
நலத்திட்டங்களை அமைச்சரவையின் மூலமாக அவ்வளவு எளிதாகப் பெற முடியாத போது பல முறை
துன் சாமிவேலு அமைச்சரவையில் வெளியேறி இருக்கிறார் என முன்னாள் அமைச்சரும்
ம.இ.காவின் முன்னாள் தலைவருமான Tan Sri S. Subramaniam
வெளிப்படையாக அறிவித்தார். பொது மேடைகளில் மகாதீர் இந்தியர்களுக்கு அதை கொடுத்தேன்
இதைக் கொடுத்தேன் என்பார். ஆனால் அவரிடமிருந்து அதைப் பெறுவதற்குப் பல ஆண்டுகளாக
ம.இ.கா போராடியது. ம.இ.காவின் தலைவராக நீண்ட காலமாக துன் சாமிவேலு இருந்தார்
அதற்கு ஒரே காரணம் மகாதீரை எதிர்க்கும் துன்.சாமிவேலுவின் துணிச்சல் தான் என Tan
Sri S. Subramaniam தெரிவித்தார்.
தாம் பல்கலைக்கழக மாணவராக இருந்த போது
கல்வி உதவி நிதிக்காகத் துன் சாமிவேலுவைச் சந்தித்ததாகக் கல்வியாளரும்
பேராசிரியருமான முனைவர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார். மாணவராக இருந்த போது
அரசியல்வாதிகளைக் கேளியாகச் சித்தரித்து மேடை நாடகங்களை அரங்கேற்றினோம் நாங்கள்.
அதை துன் சாமிவேலு அறிந்திருந்ததாலும் நாங்கள் கேட்ட தொகையை விடவும் அதிகமாகவே
துன் சாமிவேலு வழங்குவதாக உறுதியளித்தார். கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி
கொடுக்கமாட்டார் என்பது போல, துன் சாமிவேலுவின்
செயலாளர்களிடமிருந்து அந்த தொகையைப் பெறுவது பெரும் பாடாக இருந்தது என முனைவர்
கிருஷ்ணன் மணியம் தெரிவித்தார்.
1987 ஆம் ஆண்டு அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி
மாநாடு மலேசியாவில் நடத்த பெரும் பங்காற்றினார் துன் சாமிவேலு என தான் ஸ்ரீ
மாரிமுத்து தெரிவித்தார். அதனை அடுத்து AIMST
பல்கலைக்கழகத்தின் இயக்குநராகவும் நாடாளுமன்றச் செயலாளராகவும் கல்வியாளர்களை
அடையாளம் கண்டு பதவிகளையும் பொறுப்புகளையும் வழங்கி அலங்கரித்தவர் துன் சாமிவேலு
என Tan Sri T. Marimuthu புகழாரம் சூட்டினார்.
கணக்கில் இல்லாமல் கோயில்களுக்கு
நிதிகளை வழங்கியவர்களில் முதன்மையானவர் என DATUK VAITHIALINGAM நினைவூட்டினார். பொதுப்பணி அமைச்சராக துன் சாமிவேலு இருந்த
காலத்தில் குத்தகையாளர்கள் மூலமாகக் கோயில்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும்
தனியார் நிதியை வழங்கவும் துன் சாமிவேலு முக்கிய பங்காற்றினார் என DATUK
VAITHIALINGAM தெரிவித்தார்.
குளுவாங்கில் இருந்த தன்னை அடையாளம்
கண்டு அரசியல்படுத்தினார் துன் சாமிவேலு என முன்னாள் சுகாதார அமைச்சர் Tan
Sri S. Subramaniam தெரிவித்தார். தமிழ்ப்பள்ளியில்
தொடக்கக் கல்வியைப் பயின்ற துன் சாமிவேலு மலேசியாவின் தலை சிறந்த கட்டிடப்
பொறியியலாளர்களில் ஒருவரும் கூட என Tan Sri S. Subramaniam
குறிப்பிட்டார். ஆரம்பக் காலத்தில் ம.இ.காவின் 7 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த
துன் சாமிவேலு 8 ஆவது முறையாகப் போட்டியிட்டு சிலாங்கூர் மாநில ம.இ.கா செயலாளராகப்
பொறுப்பேற்றார். அதன் பின்னர் Tan Sri V. Manickavasagam தலைமையிலான
ம.இ.காவில் மெல்ல மெல்ல தன்னை அடையாளப்படுத்தினார். Tan
Sri V. Manickavasagam-க்கு துன் சாமிவேலுவின் மீது நல்ல
அபிப்ராயம் இல்லை. அதற்கு காரணம் Tan Sri V. Manickavasagam
கல்வியாளர்களுக்கு மட்டுமே வாய்ப்புகளை வழங்கினார்.
ஆனால் Tan Sri V.
Manickavasagam மறைந்த பின்னர் துன் சாமிவேலு தன்னுடைய
பொறுப்புகளை மீறி மலேசியா முழுவதும் ம.இ.கா கிளைத் தலைவர்களின் நம்பிக்கையைப்
பெற்று ம.இ.காவின் தலைவராகத் தேர்தலில் போட்டியிட்டு தலைவரானார். ம.இ.காவின்
தலைவரானாலும் கிளைத் தலைவர்களை மரியாதையுடனும் நடத்தினார்.
ஒரு கட்சியின் தலைவன் என்கிற அகம்பாவத்துடன் அவர் யாரையும் கடிந்து பேசியது இல்லை.
அவருக்கு எதிராகக் கட்சியில் இருந்தவர்களையும் அவர் அரவணைக்கவே விரும்பினார். அந்த சிறந்த தலைமைத்துவத்தால் அவர் 31 ஆண்டுகள் தொடர்ச்சியாக
ம.இ.காவின் தலைவராகப் பொறுப்பில் இருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



