மலாயாப் பல்கலைக்கழகத்தில் ஓம்ஸ் அறவாரியத்தின் 18-ஆம் ஆண்டு தங்கப்பதக்க விழா!
- Thinagaren Sanggaren
- 01 Dec, 2025
மலாயாப் பல்கலைக்கழகத்தின் 65-ஆவது பட்டமளிப்பு விழாவில் இந்திய ஆய்வியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 30 மாணவர்களுக்கு, ஓம்ஸ் அறவாரியத்தின் சார்பில் தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் D.K.F அரங்கில் எதிர்வரும் டிசம்பர் 3, மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநரும் மலேசிய அரிமா சங்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா தியாகராஜன், மலாயாப் பல்கலைக்கழகச் சமூகக் கலைப்புலத் தாளாளர் பேராசிரியர் டத்தோ முனைவர் டேனி வோங் த்சீ கென், கோ.சா அறக்கட்டளை தோற்றுநரும், முன்னாள் துணை அமைச்சருமான டான்ஸ்ரீ குமரன், இந்திய ஆய்வியல் துறை தலைவர் முனைவர் இரவீந்திரன் மாரையா, டத்தோக் தெய்வீகன், மலாயாப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் இந்த தங்கப்பதக்க விருது விழாவில் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 17 ஆண்டுகளாக ஓம்ஸ் அறவாரியம் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த தங்கப்பதக்கங்களை வழங்கி வருகிறது. 2007 ஆம் ஆண்டு இந்திய ஆய்வியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் குமரன் சுப்ரமணியம் அவர்களால் இந்திய ஆய்வியல் துறை மாணவர்களைக் கெளரவப்படுத்தும் நோக்கத்தில் ஓம்ஸ்.பா.தியாகராஜன் அவர்களிடம் தங்கப்பதக்க விருது திட்டம் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற ஓம்ஸ்.பா.தியாகராஜன் அவர்கள் தங்கப்பதக்கம் வழங்கி மாணவர்களைச் சிறப்பிக்கவும் முழு மனதுடன் ஒப்புக் கொண்டதை அடுத்து. 2007 ஆம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் முதல் முறையாக வழங்கப்பட்டது.
அதனையடுத்து 2010 ஆம் ஆண்டு இளங்கலை. மாணவர்களுடன் முதுகலை, முனைவர் பட்டம் பெறுபவர்களையும் அங்கீகரிக்க. வேண்டுமெனும் எண்ணம் ஓம்ஸ்.பா.தியாகராஜன் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட போது. அதனைப் பெருந்தன்மையுடன் ஏற்று இன்று வரையில் ஒவ்வோர் ஆண்டும். தொடர்ச்சியாகத் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 258 மாணவர்கள் கடந்த 2007 ஆண்டு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்று வரும் நிலையில் இவ்வாண்டு மேலும் 30 மாணவர்கள் தங்கப்பதக்கம் பெறவுள்ளனர்.
இந்த ஆண்டு முதல் முறையாக இந்திய ஆய்வியல் துறை
மட்டுமின்றி மலாயாப் பல்கலைக்கழகச் சமூகக் கலைப்புலத்தின்
ஒவ்வொரு துறையிலிருந்தும் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து தங்கப் பதக்கம்
வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டு இந்திய ஆய்வியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற 13
மாணவர்களுக்கும், முதுகலை பட்டம் பெற்ற இருவருக்கும் முனைவர்
பட்டம் பெற்ற ஒருவர் உட்பட சமூகக் கலைப்புலத்திலிருந்து 14 மாணவர்களும் தங்கப்பதக்கம்
பெறுகின்றனர்.
17 ஆண்டுகள் கடந்து தொடர்ச்சியாக நடைபெறும் தங்கப்பதக்கம் வழங்கும் விழாவில் முன்னாள் மாணவர்களும் விரிவுரையாளர்களும் தமிழ் ஆர்வளர்களும் பங்கேற்று நம் இந்திய சமூகத்தின் அடுத்த தலைமுறை பட்டதாரிகளை வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



