சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (உப்சி) வளர்தமிழ் மன்ற ஏற்பாட்டில் நாடகச்சுடர் போட்டி 2026
- Surendran Sumdraraj
- 26 May, 2026
- தி.கிரிஷன் -
கலைகளில் தனிச்சிறந்த கலையாகவும் தொன்மை வாய்ந்த கலையாகவும் அமைகிறது நாடகக்கலை. இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளில் இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும்.
தெருக்கூத்துகளாக இருந்து, மேடை நாடகங்களாக உருமாறி, இலக்கிய நாடகங்களாக வளர்ச்சி பெற்ற இக்கலையை இன்றைய இளைஞர்களிடையே மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் உப்சி வளர்தமிழ் மன்ற ஏற்பாட்டில் கடந்த 23 மே சனிக்கிழமையன்று காலை 8 முதல் மாலை 5 மணி வரை உப்சி வளாக ஒத்திகைத் திரையரங்கத்தில் இந்நாடகங்கள் அரங்கேறின.
உப்சி தமிழ்ப்பிரிவுத் தலைவர், இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா, உப்சி வளர்தமிழ் மன்ற மதியுரைஞர் இணைப்பேராசிரியர் முனைவர் மனோன்மணி அண்ணாமலை ஆகியோரின் ஆலோசனையால் இந்நிகழ்ச்சி முறையாகவும் சிறப்பாகவும் நடந்தேறின.
உப்சி வளர்தமிழ் மன்றத் தலைவர் செல்வன் கலையரசன் ஆறுமுகம், அவர்களின் வழிகாட்டுதலால் நிகழ்ச்சி இயக்குநர் செல்வி வனிதா நடராஜன் அவர்களும் அவர் தம் செயலவையினரின் அயராத முயற்சியினால் இப்போட்டியானது வெற்றிகரமாக நடந்தேறின.
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இந்நிகழ்ச்சியைத் திறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். இவ்வாண்டு உப்சி நிகழ்ச்சிகளுக்காக 70 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் அதிகமான நன்கொடைகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாநில அரசாங்கம் இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தேசிய அளவில் திருக்குறளை மையமாகக் கொண்டு இந்நாடகங்கள் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் துவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகம், ஈப்போ வளாகம், சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழகம், உப்சி பல்கலைக்கழகம் போன்ற உயர்நிலைக் கல்விக்கூடங்களிருந்து இருந்து மொத்தம் எட்டு குழுக்கள் பங்குப் பெற்றனர்.
இப்போட்டிக்கு நீதிபதிகளாக ஆஸ்கார் விருதும் கோல்டன் குளோப் விருதும் பெற்ற முதல் மலேசியத் திரைப்படத்தின் மூத்த நடிகர் திரு திவாகர் சுப்பையா அவர்களும் பூச்சாண்டித் திரைப்படத்தின் இயக்குநர் திரு திரு .விக்கினேஸ்வரன்கலியபெருமாள், மாயா பசார், வெண்பா, ஐவர், தள்ளிப் போகாதே போன்ற மலேசியத் திரைப்படங்களில் நடித்த நாடறிந்த நடிகர் திரு தேவகுரு சுப்பையா அவர்களும் கலந்து கொண்டு மதிப்பெண்கள் வழங்கினர்.
கலந்துகொண்ட மாணவர்கள் நடித்ததை விட கதைப்பாத்திரமாகவே வாழ்ந்தனர். எதிர்காலத்தில் இன்று நடித்தவர்கள் நாளை பெரியதொரு கதாநாயகர்களாக வருவார்கள் என நீதிபதிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
தேசிய நிலையிலான இப்போட்டியில் கலந்து கொள்வது மிகப்பெரிய விடயம் என்றும் நடித்த மாணவர்கள் அனைவரும் மேடை பயமின்றி நடித்தனர் என்றும் புகழாரம் சூட்டினர்.
5 ஆம் நிலையில் சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழக இளையரங்கம் குழுவினரும், 4 ஆம் நிலையில் உப்சி பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த விண்மீன் கதிர்களும் 3 ஆம் நிலையில் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த தீச்சுடர் குழுவினரும்
2 ஆம் நிலையில் ஆசிரியர் கல்விக் கழகம் துவான்கு பைனூன் வேதிக்கனல் குழுவினரும் முதலாம் நிலையில் துவான்கு பைனூனைச் சேர்ந்த அரங்க வில்லுகள்
குழுவினரும் வாகைச் சூடினர்.
சிறந்த நடிகருக்கான விருதினை உப்சி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விண்மீன் கதிர்கள் குழுவினரில் “அருண்” கதைப்பாத்திரத்தில் நடித்த செல்வன் கிஷன் அவர்களும் சிறந்த கதைக்கு சுல்தான் சைனல் அபிடின் பல்கலைக்கழக இளையரங்கம் குழுவினரும் வாகைச் சூடினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



