நூருல் இஸா ராஜினாமா; அறிக்கைகளே காரணம்! -பாஸ்
- Shan Siva
- 07 Aug, 2026
கோலாலம்பூர், ஆக 7: PKR கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இஸ்ஸா அன்வர் ராஜினாமா செய்தது, ஆளும் கட்சிக்குள் நிலவும் கடுமையான உட்கட்சிப் பிரச்சனைகளைப் பிரதிபலிப்பதாக பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைவர் பிரதமராகத் தனது கடமைகளில் மும்முரமாக இருக்கும்போது, துணைத் தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பாஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
ஒரு துணைத் தலைவர் ராஜினாமா செய்யும்போது, அது நிச்சயமாகக் கட்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
தலைவர் பிரதமராகத் தனது பொறுப்புகளில் மும்முரமாக இருக்கும் சூழ்நிலையில், கட்சியின் விவகாரங்களை நிர்வகிக்க வேண்டியவர் துணைத் தலைவர்தான் என்று அவர் கூறினார்.
PKR கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவுவதாக நாங்கள் நம்புகிறோம்.நாம் இப்போது காண்பது, கட்சிக்குள்ளேயே எழுந்த எதிர்ப்புகளிலிருந்து தொடங்கியது என்று அவர் இன்று மேடான் இல்முவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பல PKR நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள், இதற்குக் காரணம் என்று பெரிகாத்தான் நேஷனலின் துணைத் தலைவருமான அவர் கூறினார்.
சமீபத்தில், அம்பாங், சுபாங் மற்றும் பல தொகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், அவர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிக்கைகள் வெளிவந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், PKR-இன் உட்கட்சி விவகாரங்களை இறுதியில் கட்சியே தீர்த்துக்கொள்ள வேண்டும் என துவான் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அது அவர்களின் உள்விஷயம். இருப்பினும், மக்களின் பார்வையில், PKR தான் ஆளும் கட்சி.
கட்சிக்குள் அது எடுக்கும் எந்தவொரு முடிவும் மக்கள் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



