சிப்பாங்கில் பெண்ணை கத்தியால் குத்தியதாகப் பல்கலைக்கழக மாணவர் கைது
- Surendran Sumdraraj
- 12 Apr, 2026
சிப்பாங், ஏப். 12-
சிப்பாங் பகுதியில் உள்ள பண்டார் சன்சூரியா குடியிருப்பு வளாகத்தில் பெண் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் கூறுகையில், 22 வயதுடைய உள்ளூர் இளைஞரான சந்தேக நபர் சம்பவம் நடைபெற்ற நாளிலேயே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவர், 34 வயதுடைய பெண் ஒருவரை வாடகை குடியிருப்பில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக நம்பப்படுகிறார். இந்த தாக்குதல் சம்பவம் கடந்த முன்தினம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பக் கட்ட விசாரணையில், குறித்த இளைஞர் அந்த குடியிருப்பில் உள்ள ஒரு அறையை புதிதாக வாடகைக்கு எடுத்திருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
“இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 326ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது,” என நோர்ஹிஸாம் பஹாமான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடுமையாக காயமடைந்த பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



