சொத்து விவரங்களை அறிவிக்க MACC நோட்டீஸ் – முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - டத்தோஸ்ரீ எம். சரவணன்
- Surendran Sumdraraj
- 28 Sep, 2026
கோலாலம்பூர், செப் 28-
MACC சட்டம் 2009-இன் பிரிவு 36-இன் கீழ் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு கோரும் அறிவிப்புகளைப் பெறுவதற்காக, மனிதவளத்துறை முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமையகத்திற்குத் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சென்றார்.
சரவணன், அவரது மனைவி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுக்கும், ஒரு மாதத்திற்குள் தங்கள் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு கோரும் அறிவிப்புகள் வழங்கப்படும் என்று MACC-இன் தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமன் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டில் வசிக்கும் மூன்றாவது குழந்தைக்கு நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வழங்கப்படும்.
2022-ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்திற்கு 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தில், மொத்தம் சுமார் 1.09 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறி, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் சரவணன் மீது முன்னதாகவே மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
புகார்கள் குறித்து ஆணையம் விசாரணை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறையின் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், MACC-க்கு முழு ஒத்துழைப்பு அளித்துத் தேவையான அனைத்துத் தகவல்களையும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஹலிம் கூறினார்.
இதனிடையே மறைப்பதற்கு எதுவும் இல்லாததால், MACC-யிடம் தான் சமர்ப்பித்த சொத்து விவரங்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவும் தான் தயாராக இருப்பதாக சரவணன் தெரிவித்தார்.
தனக்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாகவே ஈட்டப்பட்டவை என்று அவர் கூறினார்; மேலும், அரசுப் பணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



