ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டேன்! - அக்மால் சலே
- Shan Siva
- 09 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 9: விமர்சனங்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடு இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே தெரிவித்துள்ளார். இது, கட்சியின் இரண்டு மூத்த தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளுக்கு மறைமுகமான பதிலாகப் பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், விமர்சனங்களை எதிர்கொள்ள தன்னிடம் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், நீண்ட காலமாகவே விமர்சனங்களை சந்தித்து வருவதாகவும் அக்மால் கூறினார். ஆனால், கொள்கைகள் என்றால் ஒரு அங்குலம் கூட பின்னடைய மாட்டேன். அதுதான் வித்தியாசம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், எந்த நபரையும் அவர் நேரடியாக குறிப்பிடவில்லை. இதற்கு முன்னர் , அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி, அம்னோ இளைஞர் பிரிவும் அதில் அக்மாலும் விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இளைஞர் பிரிவு தங்களின் கொள்கைகளுக்காக போராடுவதை தொடர வேண்டும் என்றாலும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜாஹிட் தெரிவித்தார்.
இதற்கிடையில், அம்னோ பொதுச் செயலாளர் அஸ்ய்ரஃப் வஜ்டி டுசுக்கி, விமர்சனம் செய்பவர்கள், தாமும் விமர்சிக்கப்பட தயாராக இருக்க வேண்டும் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
ஒருவர் பெருந்தன்மையுடனும், மனதளவில் வலிமையுடனும், அதே நேரத்தில் திறந்த மனதுடனும் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஜாஹிட் மற்றும் அஸ்ய்ரஃப்பின் இந்தக் கருத்துகள், நேற்று அக்மல் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவைத் தொடர்ந்து வந்துள்ளன. அந்த பதிவில், அம்னோ அரசு கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஜாஹிட் நிராகரித்ததைத் தொடர்ந்து, தாம் ‘ஒதுங்கிக் கொள்ளலாம்’ என அக்மல் கூறியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மாநாட்டில், இனம், மதம் மற்றும் அரச மரபு தொடர்பான 3R விவகாரங்களில் ‘சிவப்பு கோடுகள்’ மீண்டும் மீண்டும் மீறப்படுவதாக அக்மால் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால், திங்கட்கிழமை நடைபெற்ற அரசியல் குழு கூட்டத்தில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அக்மல் முன்வைத்த பின்னர், மடானி அரசில் உள்ள கூட்டணி கட்சிகளை அம்னோ கைவிடாது என்று ஜாஹிட் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



