பினாங்கு பாரம்பரியக் கட்டிடத்தில் ஏற்பட்ட இடிபாடுகளால் இலங்கை பிரஜை இருவர் காயம்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஆக 5: பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான அர்மேனியன் வீதியில் உள்ள ஒரு பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து விழுந்த இடிபாடுகளால் இரண்டு இலங்கை சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 66 வயதான முகமது அம்தார் மற்றும் 55 வயதான பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குனர் ஜான் சகுன் பிரான்சிஸ் தெரிவித்தார். அவர்கள் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அந்த சுற்றுலாப் பயணிகள் இன்று இலங்கை திரும்புவதாக இருந்ததாக ஜான் கூறினார்.

முதல் தளத்தின் உத்திரத்திலிருந்து விழுந்த கற்களும் மரக்கட்டைகளும் இடிபாடுகளில் அடங்கியிருந்ததாக அவர் கூறினார். 

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாரம்பரியக் கட்டிடங்களின் உரிமையாளர்கள் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பினாங்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநிலத்தில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்குமாறு ஜார்ஜ் டவுன் உலக பாரம்பரிய நிறுவனம் மற்றும் பினாங்கு தீவு நகர சபையான MBPP  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலா குழுவின் தலைவர் வோங் ஹான் வாய் தெரிவித்தார்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பழைய மற்றும் பாரம்பரியக் கட்டிடங்களின் கட்டமைப்புப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

இரு சுற்றுலாப் பயணிகளுக்கும் உடனடி உதவி வழங்கப்படும் என்றும், தேவையான ஆதரவை ஒருங்கிணைக்க கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையகத்தை மாநில அரசு தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *