கண்ணீரை வெற்றியாக மாற்றிய இளம் செவிலியர் தீபாசிவாயினி தியாகராஜன்
- Surendran Sumdraraj
- 02 Jul, 2026
தி. கிரிஷன்
லுனாஸ், ஜூன் 30 - இளம் வயதிலேயே தந்தையை இழந்த நிலையிலும், தமது தாயின் தியாகத்தையும் ஊக்கத்தையும் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமாகக் கொண்டு, தமது விடாமுயற்சியால் செவிலியர் பட்டயப் படிப்பை (Diploma in Nursing) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் கெடா லுனாஸ் பாயா பெசாரைச் சேர்ந்த தீபாசிவாயினி தியாகராஜன்.
மூன்று ஆண்டுகள் கடின உழைப்புடன் கல்விக் கற்ற இவர், தற்போது அறுவைச் சிகிச்சை அரங்கில் (Operation Theatre) செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த வாரம் "ஏய்ம்ஸ்ட்* பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றது தமது வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் என்றும், தமது குடும்பத்தின் பல ஆண்டுகாலத் தியாகங்களுக்கும் கிடைத்த பலன் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தந்தையின் மறைவுக்குப் பின்னர், தமது தாயார் தாயாக மட்டுமன்றி தந்தையாகவும் இருந்து குடும்பத்தை வழிநடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடிகள், குடும்பப் பொறுப்புகள் மட்டுமின்றி பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், தமது கல்விப் பாதிக்கப்படாதவாறு தாயார் பல தியாகங்களைச் செய்ததாகவும், தமது எதிர்காலத்திற்காக அவர் அளித்த அர்ப்பணிப்பே இன்று இவ்வெற்றிக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
பலமுறைச் சோர்வடைந்து கைவிட நினைத்தபோதெல்லாம், தாயின் ஊக்க வார்த்தைகளே மீண்டும் தமக்குத் தைரியத்தை அளித்ததாகவும் அவர் கூறினார்.
தமது வெற்றியை மறைந்த தந்தையின் நினைவுக்கும், தன்னை அர்ப்பணிப்புடன் வளர்த்த தாயாருக்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த தீபாசிவாயினி, இன்று தமது தந்தை தன்னுடன் இருந்திருந்தால் இந்த மகிழ்ச்சி இன்னும் முழுமையாக இருந்திருக்கும் என்றும், தாம் பெற்றுள்ள இந்தச் சாதனை அவரைப் பெருமைப்படுத்தியிருக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
வாழ்க்கையில் குடும்பச் சிரமங்களோ, பொருளாதாரக் குறைபாடுகளோ இருந்தாலும், அவை ஒருவரின் கனவுகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று இளைஞர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



